உலகின் முதல் பெண்கள் சிறப்பு ரெயில் சேவை தொடங்கி 26 ஆண்டுகள் நிறைவு


உலகின் முதல் பெண்கள் சிறப்பு ரெயில் சேவை தொடங்கி 26 ஆண்டுகள் நிறைவு
x
தினத்தந்தி 6 May 2018 5:15 AM IST (Updated: 6 May 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு ரெயில்வேயில் உலகின் முதல் பெண்கள் சிறப்பு ரெயில் சேவை தொடங்கி 26 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.

மும்பை,

ரெயில்வே ஊழியர்கள் பெண் பயணிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் கடந்த 1992-ம் ஆண்டு மே 5-ந் தேதி உலகிலேயே முதல் முறையாக பெண்கள் சிறப்பு ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த ரெயில் போரிவிலி- சர்ச்கேட் இடையே தினமும் 2 சேவைகள் இயக்கப்பட்டது. தற்போது மேற்கு ரெயில்வேயில் 8 பெண்கள் சிறப்பு ரெயில் சேவைகள் இயக்கப் படுகின்றன.

இந்த ரெயில்கள் தலா ஒரு முறை விரார், பயந்தர், வசாய் ரோடு, போரிவிலியில் இருந்து சர்ச்கேட்டிற்கும், சர்ச்கேட்டில் இருந்து போரிவிலி, வசாய்ரோடு, பயந்தர் மற்றும் விராருக்கு இயக்கப்படுகிறது.

மேற்கு ரெயில்வேயில் பெண்கள் சிறப்பு ரெயில் சேவை தொடங்கி நேற்றுடன் 26 ஆண்டுகள் நிறை வடைந்தது.

இதையொட்டி நேற்று ரெயில்வே ஊழியர்கள் பெண் பயணிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். பெண் பயணிகள், 26 ஆண்டுகளாக பெண்கள் சிறப்பு ரெயிலை இயக்கி வரும் ரெயில்வே நிர்வாகத்திற்கு நன்றி கூறினர்.

இது குறித்து பிரியா என்ற பெண் பயணி கூறுகையில், ரெயில்வே நிர்வாகம் மட்டும் பெண்கள் சிறப்பு ரெயில்களை இயக்கவில்லை என்றால் நான் வீட்டில் தான் இருந்து இருப்பேன். பொது பெட்டியில் பயணம் செய்து வேலைக்கு செல்வது நினைத்து கூட பார்க்க முடியாதது. பெண்கள் சிறப்பு ரெயில் மும்பை பெண்களுக்கு கிடைத்த வரம், என்றார்.

பெண்கள் சிறப்பு ரெயில் மூலம் தினமும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருவதாக மேற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ரவீந்திர பாய்கர் கூறினார். 

Next Story