எடப்பாடி அருகே தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு


எடப்பாடி அருகே  தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 May 2018 11:56 PM GMT (Updated: 5 May 2018 11:56 PM GMT)

எடப்பாடி அருகே வழித்தடம் கேட்டு தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த ஆடையூர் அம்மன்கோவிலகாடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி(வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வெள்ளையம்மாள்(50) இவர்களுக்கு தமிழரசன்(29). பூபதி(24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் வெங்கடாசலம். இவர்கள் இருவரும் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர்.

இந்த நிலையில் குப்புசாமி தனது வீட்டுக்கு வழித்தடம் மற்றும் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து உள்ளார். இதை வெங்கடாசலம் தடுத்ததாக தெரிகிறது. பின்னர் வெங்கடாசலம், குப்புசாமி கேட்ட வழித்தட பாதையில் தென்னை மரக்கன்றுகளை நட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த குப்புசாமி தனது மனைவி, 2 மகன்களுடன் சேர்ந்து வீட்டின் முன்பு வைக்கோல்களை பரப்பி அதன் உள்ளே நின்று கொண்டனர். அதன்பிறகு முன்னால் வைக்கப்பட்டு இருந்த வைக்கோலுக்கு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இது பற்றி அறிந்த அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு குப்புசாமியை தடுக்க முயன்றனர். தீ பற்றி எரிந்த வைக்கோல் கட்டு மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அப்போது அவரது மகன் பூபதி தனது கையில் வைத்திருந்த கேனை திறந்து பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் பயந்து போன அப்பகுதி மக்கள் பின்வாங்கினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் கேசவன், துணை தாசில்தார் கோமதி, பூலாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், வெங்கடாசலம், எடப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முனியப்பன் ஆகியோர் விரைந்து சென்று குப்புசாமி குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நாளை(திங்கட்கிழமை) நிலத்தை அளவீடு செய்து தடவழிப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்ததை தொடர்ந்து குப்புசாமி தனது குடும்பத்தினருடன் வைக்கோல் கட்டை விட்டு வெளியே வந்தார்.

இந்த சம்பவத்தால் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story