300 ஆண்டுகளுக்கு பின்பு நந்தீஸ்வரர் இல்லாத பழமையான ஆதிசிவன் கோவில் கும்பாபிஷேகம், முகூர்த்தக்கால் நடப்பட்டது


300 ஆண்டுகளுக்கு பின்பு நந்தீஸ்வரர் இல்லாத பழமையான ஆதிசிவன் கோவில் கும்பாபிஷேகம், முகூர்த்தக்கால் நடப்பட்டது
x
தினத்தந்தி 7 May 2018 3:00 AM IST (Updated: 7 May 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே நந்தீஸ்வரர் இல்லாத ஆதிசிவன் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பழமையான இந்த கோவிலில் நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் பல ஏக்கர் பரப்பளவில் இயற்கை வளத்தோடு, அமைதியும் பக்தியும் நிலவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான பழமையான ஆதி சிவன் கோவில் உள்ளது. இங்கு ஆதிசிவன் சுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு அருள்புரிந்து வருவதாக ஐதீகம். சிவன் கோவில் என்றாலே அங்கு கருவறைக்கு முன்பு நந்தீஸ்வரர் வீற்றிருப்பார். ஆனால் பெருமை வாய்ந்த இந்த திருத்தலத்தில் நந்தீஸ்வரர் இல்லாமல் சிவன் எழுந்தருளியிருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

பல தலைமுறைகளாக வழிபட்டு வந்த இந்த கோவிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், அதற்கான திருப்பணி வேலைகளை தொடங்க மேல உரப்பனூர், விளாச்சேரி நான்கு தேவர்கள் வகையறாக்கள், திருப்பணி நிர்வாக குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி பெரிய கோவிலின் நுழைவு வாயிலில் 5 நிலைகள் கொண்ட 72 அடி உயர புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.

மேலும் 101 அடி நீளம், 51 அடி அகலம் கொண்ட பிரதான மண்டபத்துடன் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது. சின்ன கோவில் வளாகத்தில் 67 அடி நீளம், 47 அடி அகலம் கொண்டு சிறப்பு மண்டபத்துடன் ஒரு சிறிய கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இவை கம்பீரமாக காட்சியளிப்பது, பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்ததையொட்டி 300 ஆண்டுகளுக்கு பின்பு வருகிற 27-ந்தேதி காலையில் மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை மகாகும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் மேல உரப்பனூர், விளாச்சேரி நான்கு தேவர் வகையாறாக்கள், கோவில் திருப்பணி நிர்வாக குழுவினர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் நிற காவி உடை அணிந்து கைகளில் காப்பு கட்டி கடும் விரதம் தொடங்கினர். முகூர்த்தக்கால் நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story