பெரியார் பஸ் நிலையம் அருகே வாகன ஓட்டிகளின் நிழலுக்காக காலையில் போடப்பட்ட பிரமாண்ட பந்தல்; பகலில் கிழிந்து சரிந்தது


பெரியார் பஸ் நிலையம் அருகே வாகன ஓட்டிகளின் நிழலுக்காக காலையில் போடப்பட்ட பிரமாண்ட பந்தல்; பகலில் கிழிந்து சரிந்தது
x
தினத்தந்தி 7 May 2018 3:45 AM IST (Updated: 7 May 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே மேம்பாலத்தில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளின் நிழலுக்காக நேற்று காலையில் பிரமாண்டமாக பந்தல் போடப்பட்டு இருந்தது. அந்த பந்தல் காற்றினால் பகலில் கிழிந்து சரிந்து போனது.

மதுரை,

மதுரை பெரியார் பஸ்நிலையம் வாகன போக்குவரத்து நெருக்கடியான பகுதியாகும். அங்குள்ள மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து அதிகம். இந்த நிலையில் நேற்று காலையில் பெரியார் பஸ்நிலையம் அருகே பாதசாரிகள், பயணிகள், வாகனஓட்டிகள் என அனைவரின் பார்வையும் மேம்பாலத்தின்மீது இருந்தது. அதற்கு காரணம் பாலத்தின் இறக்கத்தின் ஒரு பகுதியில் சுமார் 50 அடிதூர நீளத்திற்கு, உயரமான பிரமாண்ட நிழல் பந்தல் போடப்பட்டு இருந்தது தான்.

பாலத்தில் இருந்து வாகனங்கள் சிக்னலுக்காக நிற்கும்போது நிழல் தரும் வகையில் அந்த பந்தல் காணப்பட்டது. பசுமை குடில்களுக்கு பயன்படுத்தக்கூடிய நிழல் வலையால் இந்த பந்தல் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு காட்சியளித்தது. மதுரையில் வேறு எங்கும் வெயில் இல்லை இங்கு மட்டும்தான் வெயில் கொளுத்துகிறது என நினைத்து அந்த பந்தல் போடப்பட்டு இருந்தது தான் ஆச்சரியம்.

இதற்கிடையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றுக்கு தாங்கவில்லை நிழல்பந்தல். அந்த பிரமாண்ட பந்தல் கிழிந்து, சரிந்தது. அதைப்பார்த்து அந்தப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து இந்த நிழல் வலையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சிறிதுநேரத்தில் மழையும் பெய்தது. காலையில் பளிச்சென்று காணப்பட்ட நிழல்பந்தல் பகலில் சரிந்து காணாமல் போனது. இந்தபந்தல் அமைப்பதற்காக பாலத்தின் இருபுறமும் வரிசையாக உயரமான சவுக்கு கம்புகள் நடப்பட்டு இருந்தன. திறந்த வெளியில் போடப்பட்டு இருந்த இந்த நிழல்பந்தல் சரிந்த போது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

பாலத்தின் இறக்கத்தில் அடிக்கடி ரோடுகள் பெயர்ந்து மேடு, பள்ளம் ஆயின. வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். அதைசரி செய்யும் வகையில் பாலத்தின் இறக்கத்தில் சிறிது தூரம் பேவர் பிளாக்குகளால் ரோடு அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நிழல் பந்தல் அமைத்த கம்புகள் நடுவதற்காக பேவர்பிளாக்கை உடைத்து வரிசையாக குழி தோண்டப்பட்டுள்ளது. அதனால் பேவர் பிளாக் ரோடும் சேதம் அடைந்துள்ளது. அந்த வழியாக பாலத்தில் வரும் பாதசாரிகளுக்கு இந்த குழிகள் சிரமத்தை ஏற்படுத்த வகை செய்துள்ளது.

இதேபோல் கடந்த 19-ந்தேதி காலை இந்த பாலத்தின் இறக்கத்தில் கட்டபொம்மன்சிலை, பெரியார் பஸ்நிலையம் செல்லக்கூடிய பகுதியில் செல்லும் வாய்க்காலை சீரமைப்பதாக கூறி பொக்லைன்மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. எவ்வித முன்அறிவிப்பும் இன்றி பள்ளம் தோண்டப்பட்டதால் வாகனபோக்குவரத்து பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் காளவாசல் அருகிலேயே வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டன.

நேரம் ஆக ஆக நெருக்கடி அதிகரித்தது. பயணிகளும். வாகனஓட்டிகளும் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். அதன்காரணமாக பிற்பகலில் அந்தபள்ளத்தை உடனடியாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். கால்வாய்பணி நிறுத்தப்பட்டு பெரும்பள்ளம்மூடப்பட்டது. அந்த ரோடு சரி செய்யப்பட்டது. அதனால் போக்குவரத்து மீண்டும் சீரடைந்தது.

வெயிலால் தண்ணீர் ஆவிஆகி நீர்மட்டம் குறைவதை தவிர்ப்பதாக கூறி வைகைஅணையில் தண்ணீர் மீது தெர்மாக்கோல் போட்டு மூடப்பட்டது. போட்ட உடனேயே தெர்மாக்கோல் காற்றில் பறந்தது. அதுபோல் இப்போது மதுரை நகரில் வாகனத்திற்கு நிழல் தருவதாக நினைத்து பாலத்தில் போடப்பட்ட பிரமாண்ட பந்தல் சிலமணி நேரத்தில் காற்றில் சரிந்து போனது. இதற்காக செலவுசெய்த பணம் வீண் என்றாலும் கூட இதுபோன்ற ஐடியாக்கள் அதிகாரிகளுக்கு எப்படித்தான் உதயமாகிறதோ என்று வாகனஓட்டி ஒருவர் வேதனையுடன் கூறினார். 

Next Story