பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி தோட்டக்கலைத்துறை தினக்கூலி பணியாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்


பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி தோட்டக்கலைத்துறை தினக்கூலி பணியாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 7 May 2018 4:15 AM IST (Updated: 7 May 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம், சம்பள உயர்வுக்கோரி தோட்டக்கலைத்துறை தினக்கூலி பணியாளர்கள் ஊட்டியில் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை தொழிலாளர் சங்கம் சார்பில், தோட்டக்கலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த சில நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

பூங்காவின் உள்பகுதியில் தினக்கூலி பணியாளர்கள் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்ரமணியம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தினக்கூலி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுகுறித்து உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

நீங்கள் வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபடுவதால், உங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானம் பாதிக்கிறது. எனவே, போராட்டத்தை கைவிட்டு பணியை தொடருங்கள் என்றார். இதற்கு தினக்கூலி பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் போஜராஜ் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, காட்டேரி பூங்கா, நாடுகாணி தோட்டக்கலை பண்ணை, நஞ்சநாடு தோட்டக்கலை பண்ணை, தும்மனட்டி தோட்டக்கலை பண்ணை உள்ளிட்ட தோட்டக்கலையில் தினக்கூலி அடிப்படையில் சுமார் 800 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.250 மட்டுமே வழங்கப்படுகிறது. மலை பிரதேசமான ஊட்டியில் இந்த சம்பளத்தை வைத்து பணியாளர்கள் தங்களது குழந்தைகளின் படிப்பு, அன்றாட செலவுகளை சமாளிக்க மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

எனவே, தினக்கூலி பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். கோரிக்கைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, தினக்கூலி பணியாளர்களின் போராட்டம் மேலும் வலுவடையும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story