தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கிய ஆட்டோ டிரைவர் பிணமாக மீட்பு


தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கிய ஆட்டோ டிரைவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 7 May 2018 4:15 AM IST (Updated: 7 May 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கிய ஆட்டோ டிரைவர் பிணமாக மீட்பு.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அந்தியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் சக்திவேல் (வயது 27). ஆட்டோ டிரைவர். இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் வயலப்பாடி செல்லும் வழியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் நேற்று முன்தினம் மாலை குளித்தார். பின்னர் குளித்து விட்டு 4 பேரும் கரைக்கு வந்து விட்டனர். ஆனால் சக்திவேல் தண்ணீரில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் தண்ணீரில் சக்திவேல் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகத்தில் நண்பர்கள் 4 பேரும், பொதுமக்கள் உதவியுடன் மீண்டும் தண்ணீரில் இறங்கி, அவரை தேடினர். ஆனால் நீண்ட நேரமாகியும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கும், குன்னம் போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் இறங்கி சக்திவேலை தேடும் பணியில் தீவிரமாக தேடினர். மேலும் சக்திவேலின் குடும்பத்தினர், உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் சக்திவேலை தண்ணீரில் இருந்து பிணமாக மீட்டனர். அப்போது அவரது உடலை உறவினர்கள் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதையடுத்து குன்னம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சக்திவேலுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணமாகி பரமேஸ்வரி என்கிற மனைவி உள்ளார். ஆனால் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story