கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி திரளான பொதுமக்கள் பங்கேற்பு


கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி திரளான பொதுமக்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 7 May 2018 4:00 AM IST (Updated: 7 May 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

வரட்டனப்பள்ளி பாரத கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே வரட்டனப்பள்ளி மேல்தெரு ஆலமரம் அருகில் 103 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத கோவில் உள்ளது. இந்த கோவிலில் 66-ம் ஆண்டு திரவுபதியம்மன் அக்னி வசந்த மகாபாரத விழா கடந்த ஏப்ரல் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி தினமும் கோவில் வளாகத்தில், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மகாபாரத சொற்பொழிவு நடந்து வந்தது. இதே போல் தினமும் இரவில் கிருஷ்ணன் பிறப்பு, அம்பா அம்பாளிகை கல்யாணம், பாண்டவர் பிறப்பு, வில் வளைப்பு, திரவுபதி கல்யாணம், அர்ச்சுணன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் கடபலி, அபிமன்னன் சண்டை, கர்ணன் சண்டை ஆகிய நாடகங்கள் நடைபெற்றது.

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

இதன் தொடர்ச்சியாக 17-வது நாளாக நேற்று காலை கோவில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், துரியோதனன், பீமன் சண்டையில் துரியோதனன் இறப்பது போல் நாடக குழுவினர் நடித்து காட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். 

Next Story