கீரிப்பாறை அருகே ஊருக்குள் நடமாடும் யானைகளால் பொதுமக்கள் பீதி


கீரிப்பாறை அருகே ஊருக்குள் நடமாடும் யானைகளால் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 7 May 2018 3:45 AM IST (Updated: 7 May 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

கீரிப்பாறை அருகே ஊருக்குள் நடமாடும் யானைகளால் பொதுமக்களால் பீதியடைந்து உள்ளனர்.

அழகியபாண்டியபுரம்,

கீரிப்பாறை அருகே வெள்ளாம்பி, மாறாமலை போன்ற மலையோர பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் வாழை, கிராம்பு, ரப்பர் போன்றவற்றை பயிரிட்டு வருகிறார்கள்.

தற்போது, கோடை காலம் நிலவி வருவதால், வனப்பகுதியில் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. எனவே, வன விலங்குகள் தண்ணீர், உணவை தேடி ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளன. கீரிப்பாறை அருகே கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை அழித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது.

தென்னை சேதம்

நேற்று முன்தினம் நள்ளிரவு வெள்ளாம்பி பகுதியில் ஒரு காட்டு யானை நடமாடியது. அந்த யானை ஸ்ரீரங்கன் என்பவரது வீட்டின் முன்பு நின்ற தென்னை மரத்தை சேதப்படுத்திவிட்டு சென்றது. காலையில் இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோல் அந்த பகுதியில் பல விவசாய பயிர்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதனால், அதிகாலையில் பால்வெட்டும் தொழிலுக்கு செல்லும் கிராம மக்கள் உயிருக்கு பயந்து செல்லும் சூழல் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படுகிறார்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே, ஊருக்குள் நாடமாடும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும், தண்ணீருக்காக காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவதை தவிர்க்க, வன பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story