நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவரின் தந்தை மரணத்துக்கு மத்திய -மாநில அரசுகளே பொறுப்பு: ஈரோட்டில் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் பேட்டி


நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவரின் தந்தை மரணத்துக்கு மத்திய -மாநில அரசுகளே பொறுப்பு: ஈரோட்டில் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 7 May 2018 4:30 AM IST (Updated: 7 May 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் தந்தை மரணத்துக்கு மத்திய-மாநில அரசுகளே பொறுப்பு என்று ஈரோட்டில் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் கூறினார்கள்.

ஈரோடு, 

உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் ஈரோட்டில் நேற்று மாநாடு நடந்தது. மாநாட்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு பிரச்சினையில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. தமிழக மாணவ -மாணவிகளின் மருத்துவ கல்வி வாய்ப்பை தட்டிப்பறிக்க மத்திய அரசு இதுபோன்ற சூழ்நிலைகளை உருவாக்குகிறது. தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என தடுத்து நிறுத்த தமிழக அரசு தவறிவிட்டது. குறைந்த பட்சம், தமிழக மாணவ -மாணவிகள் தமிழகத்தில் நீட் தேர்வை எழுதும் வாய்ப்பையாவது பெற்றுத்தந்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாமல் கையாலாகாத அரசாக உள்ளது.

தமிழக மாணவர்களுக்கு சிக்கீம், அசாம், ராஜஸ்தான், கேரளா என பல மாநிலங்களில் தேர்வு மையத்தை வழங்கி உள்ளனர். ஊரும், மொழியும் தெரியாமல் அந்த மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அதே காரணத்தால்தான் எர்ணாகுளத்தில் தேர்வு எழுத சென்ற மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் இறந்து விட்டார்.

தந்தை இறந்தது கூட தெரியாமல் அந்த மாணவன் தேர்வு எழுத கொண்டிருந்தான். இந்த கொடுமையான சாவுக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். மேலும் அந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபோதுமானது அல்ல. ரூ.25 லட்சமாக வழங்க வேண்டும். வரும் ஆண்டுகளில் இதுபோன்ற குழப்பத்தை தமிழக அரசு முன்னதாகவே தடுக்காவிட்டால் தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி என்பது கனவாகவே போகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழக மாணவர்களுக்கு, நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்வு மையத்தை பெற்றுத்தரக்கூட முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது. பல மாணவ -மாணவிகளை அழைத்துச்செல்ல வாய்ப்பு இல்லாமல் நீட் தேர்வையே அவர்கள் புறக்கணித்து விட்டனர். இது மாணவர்களின் கல்விக்கு மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள மிகப்பெரிய முட்டுக்கட்டையாகும்.

திருத்துறைபூண்டியை சேர்ந்த விவசாயி தன்னுடைய மகனுடன் கேரளா மாநிலம் எர்ணாகுளம் தேர்வு மையத்துக்கு சென்று மாரடைப்பால் இறந்துள்ளது. அவரது இறப்பு மத்திய, மாநில அரசுகளின் தவறான செயல்பாட்டால் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு.

காவிரி பிரச்சினை, கெயில், உயர் மின் கோபுரம் அமைத்தல், மீத்தேன், நியூட்ரினோ திட்டம் என மத்திய அரசு அறிவிப்புகளால் தமிழகத்தில் தினமும் போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு தீர்வு காண மாநில அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. காவிரிநீரை திறந்துவிட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டும் மத்திய அரசும், கர்நாடக அரசும் அதனை மதிக்கவில்லை.

ஒரு இடத்தில் தொழில் தொடங்க பலதுறையிடம் அனுமதிபெற வேண்டும். ஆனால் எனது நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க என்னிடம் சொல்லக்கூட தேவை இல்லை என மத்திய அரசு விதிமுறைகளை வகுப்பது சர்வாதிகாரமாகும். கேரளாவில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக பூமிக்கடியில் கேபிள் பதித்துள்ளனர். அங்கு வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் உயர் மின் கோபுரங்கள் அமைத்தால் மின் கதிர்கள், வன விலங்குகள், பறவைகள் பாதிக்கும் என அனுமதிக்கவில்லை.

ஆனால் தமிழகத்தில் மனிதர்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை எனக்கூறி அமைக்கிறார்கள். விவசாயத்தையும், விவசாய நிலங்களையும் காக்க போராட்டதை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story