கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு: நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
கோபி அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவர் கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள தாழ்குனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் வினித் வசந்த் (வயது 17). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வினித் வசந்த நண்பர்கள் 4 பேருடன் கோபி அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அப்போது 5 பேரும் வாய்காலில் ஆனந்தமாக குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது வினித் வசந்த் வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்றார்.
இதனால் அவர் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். அப்போது வினித் வசந்த் ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்‘ என்று அபயக்குரல் எழுப்பினார். சத்தம் கேட்டு நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதனால் வினித் வசந்த் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மீனவர்கள் உதவியுடன் வினித் வசந்தின் உடலை கீழ்பவானி வாய்க்காலில் தேடினார்கள். ஆனால் அவரின் உடல் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் உடலை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் கோபி அருகே உள்ள செம்மாண்டாம்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் நேற்று மதியம் வினித் வசந்தின் உடல் மிதந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வினித் வசந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story