வரும் கல்வி ஆண்டில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


வரும் கல்வி ஆண்டில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 7 May 2018 5:30 AM IST (Updated: 7 May 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

வரும் கல்வி ஆண்டில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு பயிற்சிக்கு 72 ஆயிரம் பேர் ஆன்-லைனில் பதிவு செய்திருந்தனர். இறுதியாக 8 ஆயிரத்து 624 பேர் மட்டுமே பயிற்சிக்கு தேர்வு பெற்றனர். அதில் சிறந்த மாணவர்களாக 3 ஆயிரத்து 154 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 9 கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்காக தமிழக அரசு ரூ.5 கோடி செலவிட்டுள்ளது வரும் கல்வி ஆண்டில் நாள் தோறும் மாலை 1 மணி நேரமும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 மணி நேரமும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இதேபோல் வரும் கல்வி ஆண்டில் நீட் தேர்வை கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்கள் எழுதுவார்கள். எனவே அவர்களில் சிறப்பாக படிக்கும் 10 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் இருந்து நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு 7 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரெயில் கட்டணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் 32 பள்ளிக்கூடங்களில் மாணவர்களே கிடையாது. 1,200 பள்ளிக்கூடங்களில் 10-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேசி சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பேட்டியின் போது நகராட்சி முன்னாள் தலைவர் கந்தவேல் முருகன், நகர முன்னாள் செயலாளர் காளியப்பன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story