அறிவிப்பு வெளியாகி ஓடத் தொடங்கும் முன்பே ரத்து: நெல்லை - தாம்பரம் அந்த்யோதயா ரெயில் இயக்கப்படுவது எப்போது?


அறிவிப்பு வெளியாகி ஓடத் தொடங்கும் முன்பே ரத்து: நெல்லை - தாம்பரம் அந்த்யோதயா ரெயில் இயக்கப்படுவது எப்போது?
x
தினத்தந்தி 7 May 2018 5:30 AM IST (Updated: 7 May 2018 4:41 AM IST)
t-max-icont-min-icon

அறிவிப்பு வெளியாகி ஓடத் தொடங்கும் முன்பே ரத்து செய்யப்பட்ட நெல்லை -தாம்பரம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் எப்போது இயக்கப்படும்? என்று தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

நெல்லை, 

சென்னையில் இருந்து தமிழகத்தின் நெல்லை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு செய்ய முடியாத வகையில், காத்திருப்போர் பட்டியலே பல ரெயில்களில் 200-ஐ தாண்டிவிட்டது. இதனால், சிறப்பு ரெயில்கள் எதுவும் இயக்கப்படாதா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், வணிக ரீதியிலான சிறப்பு கட்டண ரெயில்களையே தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது.

சிறப்பு வசதிகள் எதுவும் இல்லாத இந்த சிறப்பு கட்டண ரெயில்களில் டிக்கெட் விலை இரு மடங்குக்கு மேல் அதிகமாக உள்ளது. இதனால், இந்த ரெயில்களை பயணிகள் பெரும்பாலும் விரும்புவது கிடையாது. வழக்கமான கட்டணத்தில் சிறப்பு ரெயில்கள் எதுவும் இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்நோக்கி இருந்தனர்.

இந்த நிலையில் தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் வகையில், நெல்லை -சென்னை தாம்பரம் இடையே கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி முதல் அந்த்யோதயா (ஏழைகளின் எழுச்சி) எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரெயிலின் சிறப்பு என்னவென்றால், மொத்தம் உள்ள 16 பெட்டிகளும் முன்பதிவில்லாத பெட்டிகளாகும்.

எனவே, ரூ.200-க்கும் குறைவான கட்டணத்தில் இந்த ரெயிலில் பொதுமக்கள் பயணிக்க முடியும். ஏழைகள் பயன்பெறுவதற்காகவே இந்த ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது. இந்த அறிவிப்பை கண்ட தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறைந்த கட்டணத்திலேயே சொந்த ஊருக்கு எப்போது வேண்டுமானாலும் சென்றுவர முடியும் என்று கருதினார்கள்.

அந்த்யோதயா ரெயிலை இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் தெற்கு ரெயில்வே ஈடுபட்டது. ரெயிலுக்கான புத்தம் புதிய பெட்டிகள், சென்னை தாம்பரம், பல்லாவரம் ரெயில் நிலையங்களில் பகுதி பகுதிகளாக நிறுத்திவைக்கப்பட்டன. அனைத்தும் தயார் நிலையில் இருந்தும், பொதுமக்களும் ரெயிலில் பயணிக்க தயாராகிவந்த நிலையில், அந்த ரெயில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டது.

இந்த ரெயில் ஓடத் தொடங்கினால், ஒவ்வொரு நாளும் சுமார் 1,500 பயணிகள் சென்னையில் இருந்து நெல்லை மார்க்கத்திலும், இதே எண்ணிக்கையில் பயணிகள் நெல்லையில் இருந்து சென்னை மார்க்கத்திலும் பயணம் செய்ய முடியும். இத்தனை பயணிகள் பஸ்களில் செல்ல வேண்டும் என்றால், 40 பஸ்கள் தேவைப்படும்.

தற்போது, அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்களையே நம்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரெயிலில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் பயணம் செய்யும் கட்டணத்தில், பஸ்களை பொறுத்தவரை ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும்.

எனவே, ரத்து செய்யப்பட்டுள்ள அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும் என்று நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட பயணிகளின் வலியுறுத்தி உள்ளனர். நெல்லையில் இருந்து சென்னைக்கு நேரடியாக புறப்படும் வகையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டுமே நேரடியாக உள்ளது. தற்போது நெல்லையில் இருந்து நேரடியாக புறப்படும் வகையில் இந்த நெல்லை -தாம்பரம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் எப்போது இயக்கப்படும்? என்று ரெயில் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். எனவே ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக தயார் நிலையில் உள்ள ரெயில் பெட்டிகளை கொண்டு நெல்லை -தாம்பரம் இடையிலான ரெயிலை இயக்க வேண்டும்.

Next Story