தென்காசியில் துணிகரம்: வட்டார வளர்ச்சி அதிகாரி வீடு புகுந்து 5 பவுன் சங்கிலி திருட்டு
தென்காசியில், ‘நீட்’ தேர்வுக்கு மகனை கேரளாவுக்கு அழைத்து சென்ற வட்டார வளர்ச்சி அதிகாரியின் வீடு புகுந்து 5 பவுன் சங்கிலியை மர்மநபர் திருடி சென்று விட்டார்.
தென்காசி,
நெல்லை மாவட்டம் தென்காசி காளிதாசன் நகரை சேர்ந்தவர் முருகையா. இவர், வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கனகம்மாள். இவர், தென்காசி வேளாண்மைத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மகன் பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். அவருக்கு ‘நீட்’ தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு, மகனை அழைத்து கொண்டு முருகையா தம்பதியர் எர்ணாகுளம் சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. பதறிப்போன பக்கத்து வீட்டுக்காரர் இதுகுறித்து முருகையாவுக்கு தகவல் கொடுத்தார். பின்னர், முருகையா கூறியதன் பேரில் பக்கத்து வீட்டுக்காரர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
அந்த பீரோவில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டு இருந்தது. மேலும் மற்ற பொருட்கள் திருடப்பட்டது குறித்து முழு விவரம் தெரியவில்லை. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் தென்காசி போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.
மகன் ‘நீட்’ தேர்வை எழுதி முடித்த நிலையில், நேற்று மாலையில் எர்ணாகுளத்தில் இருந்து முருகையா குடும்பத்தினர் புறப்பட்டு வருவதாகவும், அவர்கள் வந்து முழுமையாக வீட்டை பார்த்த பின், திருட்டு போன பொருட்களின் விவரம் தெரியவரும் என தென்காசி போலீசார் தெரிவித்தனர். இந்த வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story