குரும்பூர் அருகே சாலையோர மரத்தில் வேன் மோதி விபத்து; 13 பேர் காயம்


குரும்பூர் அருகே சாலையோர மரத்தில் வேன் மோதி விபத்து; 13 பேர் காயம்
x
தினத்தந்தி 7 May 2018 5:54 AM IST (Updated: 7 May 2018 5:54 AM IST)
t-max-icont-min-icon

குரும்பூர் அருகே சாலையோர மரத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் காயம் அடைந்தனர்.

தென்திருப்பேரை,

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சரவணகுமார் (வயது 30). இவர் நேற்று முன்தினம் இரவு தேனியில் இருந்து தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வருவதற்காக வேனில் புறப்பட்டார். வேனை தேனி மாவட்டம் தெலுங்கு செட்டியார்குளத்தை சேர்ந்த விவேகானந்தன் மகன் கணேஷ் (28) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை வேன் நெல்லை- திருச்செந்தூர் ரோட்டில் குரும்பூர் அருகே மணத்தி ‘எஸ்‘ வளைவை கடந்து புரையூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது, வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் இருந்த சரவணகுமார், குருவம்மாள் (52), பூல்பாண்டி (30), கிருஷ்ணகுமார் (26), ஜெயலட்சுமி (28), ஆதிமுருகன் (5), கிஷோக் பிரகாஷ் (8), ஆனந்த் (25), பழனியம்மாள் (63), ஆனந்தி (30), லட்சுமி ஈசுவரி (50), ஆத்தியப்பன் (60) உள்பட 13 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் ஆனந்தி மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் கணேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story