முதல்-அமைச்சர் வருகை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிகாரிகளுடன் ஆலோசனை


முதல்-அமைச்சர் வருகை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிகாரிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 7 May 2018 5:58 AM IST (Updated: 7 May 2018 5:58 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டி வருகையையொட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவில்பட்டி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ந் தேதி கோவில்பட்டியில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். அப்போது அவர் 2-வது குடிநீர் குழாய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் மாவட்டத்தில் முடிவடைந்த பல்வேறு அரசு துறை அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தும், கோவில்பட்டி நகரில் பகிர்மான குழாய்களை அமைக்கும் புதிய திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார். பின்னர் விழாவில் கலந்து கொள்ள வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்து பள்ளி அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி வீரப்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், நகரசபை ஆணையாளர் அட்சயா, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து கோவில்பட்டி நகரில் உள்ள 36 வார்டு அ.தி.மு.க. நிர்வாகிகளுடனாக ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது.

கோவில்பட்டியில் 2-வது குடிநீர் குழாய் திட்டம் 2 முறை வெள்ளோட்டம் காணப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதற்காக சீவலப்பேரி ஆற்று படுகையில் 4 உரை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. 51 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. கோவில்பட்டி நகரில் 10 மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளில் 7 தொட்டிகளின் பணி முழுமை அடைந்து உள்ளது. 3 தொட்டிகளின் பணிகள் நடந்து வருகிறது. தற்போது இந்த திட்டம் தயார் நிலையில் உள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட பின்னர், கோவில்பட்டி நகருக்கு தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.

தமிழக முதல்-அமைச்சருக்கு தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார். அவ்வாறு அவர்கள் கருப்பு கொடி காட்டுவதை கோவில்பட்டி நகர மக்களே ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story