கிணற்றுக்குள் இறங்கி வேலை செய்த தொழிலாளி பலி; 2 பேர் படுகாயம்


கிணற்றுக்குள் இறங்கி வேலை செய்த தொழிலாளி பலி; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 May 2018 3:45 AM IST (Updated: 8 May 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றுக்குள் இறங்கி வேலை பார்த்த தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். கற்களை மேலே தூக்க பயன்படுத்திய ராட்சத தொட்டி கழன்று விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

ஆலங்குளம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டணம் பகுதியில் தவிட்டு மில் ஒன்று உள்ளது. அந்த மில்லுக்கு பின்னால் அமைந்துள்ள நிலத்தில் புதிதாக கிணறு தோண்டும் பணி நடந்து வந்தது. பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி வேதக்கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 54) என்பவருக்கு சொந்தமான எந்திரம் மூலம் கிணறு தோண்டப்பட்டது.

நேற்று காலை வேலை நடந்து கொண்டிருந்தது. இந்த பணியில் ராஜேந்திரனின் அண்ணன் ராஜதுரை (67), ராயப்ப நாடானூரை சேர்ந்த மாரியப்பன் (50), மைலப்புரத்தை சேர்ந்த சுடலைமுத்து (33) ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 150 அடி வரையில் கிணறு தோண்டப்பட்டு இருந்தது.

கிணற்றில் தோண்டப்பட்ட பாறாங்கற்களை ராட்சத இரும்பு தொட்டியில் ஏற்றி அதனை எந்திரம் மூலம் மேலே கொண்டு வந்தனர். நேற்று வேலை முடிந்த பிறகு அந்த இரும்பு தொட்டியில் 3 தொழிலாளர்களையும் ஏற்றி எந்திரம் மூலம் மேலே தூக்கினர். அப்போது இரும்பு தொட்டி, அந்த எந்திரத்தில் இருந்து கழன்று விழுந்தது. இரும்பு தொட்டியில் இருந்த 3 தொழிலாளர்களும் அப்படியே கிணற்றுக்குள் விழுந்தனர். இதைப்பார்த்து மேலே நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் ஆலங்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராமசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர்.

அங்கு ராஜதுரை ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மாரியப்பன், சுடலைமுத்து ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜதுரையின் உடல் பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பலியான ராஜதுரையின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

விபத்து நடந்த இடம் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமானது. அந்த இடத்தில்தான் புதிதாக கிணறு வெட்டும் பணி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிணறு வெட்டும் பணியின் போது தொழிலாளி பலியான சம்பவம் அவரது சொந்த ஊரான திப்பணம்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story