சூப்பர் முதல்-அமைச்சராக கவர்னர் செயல்படுகிறார் - வேல்முருகன் பேட்டி


சூப்பர் முதல்-அமைச்சராக கவர்னர் செயல்படுகிறார் - வேல்முருகன் பேட்டி
x
தினத்தந்தி 8 May 2018 5:00 AM IST (Updated: 8 May 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் முழு அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டு சூப்பர் முதல்அமைச்சராக கவர்னர் செயல்படுகிறார் என்று ராமநாதபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி அளித்தார்.

ராமநாதபுரம்,

நீட் தேர்வை கண்டித்தும், நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் நேற்று காலை நேரில் சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிடம் அனுப்பப்பட்டுஉள்ளது. ஆனால், அதனை மத்திய அரசு இதுவரை மதிக்கவில்லை. மத்திய அரசு சிறப்பு சட்டமாக்கி ஜனாதிபதி ஒப்புதல் பெற்று இருந்தால் தமிழகத்தில் நீட் தேர்விற்காக இதுபோன்ற பலி ஏற்பட்டு இருக்காது. நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியத்திற்காக போராடுபவர்கள் மீது மத்திய அரசு தமிழக காவல்துறையை மிரட்டி கடும்நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக அரசின் முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்டு கவர்னர் சூப்பர் முதல்-அமைச்சராக செயல்பட்டு வருகிறார். 2 பேர் பலியாகி இருப்பதற்கு மத்திய-மாநில அரசுகளின் சட்டங்களும், திட்டங்களும் தான் காரணம். இதற்கு மத்திய-மாநில அரசுகள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

மத்திய அரசு பல்வேறு வகைகளில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் பண்பாட்டு கலாசார படையெடுப்பு நடத்தி உள்ளனர். இந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்விற்காக போராடிய ராமேசுவரம் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து அதிகாலை 4 மணிக்கு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் என்ன கொலை செய்தார்களா, தமிழக அரசு, மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு துணைபோவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பதவியை தக்க வைத்துக்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் பொறுத்துக்கொள்வது நாகரிகமான போக்கு அல்ல. நியாயமான கோரிக்கைகளுக்கு போராடுபவர்களை ஆதரிக்கிறோம் என்று கூறும் தமிழக அரசு மறுபுறம் ஜனநாயக ரீதியில் போராடுபவர்களை கைது செய்து வருகிறது.

இந்த இரட்டை வேடம் போடும் செயல் கண்டிக்கத்தக்கது. பதவிக்காக தமிழக மக்களின் அனைத்து உரிமைகளையும் காவு கொடுத்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கூட்டு சேர்ந்து கொண்டு துரோகம் இழைத்து வருகின்றன. கவர்னர் சூப்பர் முதல்-அமைச்சராக அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார். இது அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பானது. யாராலும் மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story