திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வேப்பஞ்செட்டியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள ஏரியில் அரசு அனுமதி பெற்று சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. ஆனால் விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகவும், அனுமதி அளிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்திலும் சவுடு மண் அள்ளப்படுகிறது. ஏரியின் கரையும் சேதப்படுத்தி உள்ளனர். தினமும் சவுடு மண் அள்ளிக்கொண்டு 100-க்கும் மேற்பட்ட லாரிகள் வேகமாக சென்று வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தட்டிக்கேட்ட எங்கள் பகுதியை சேர்ந்த அரி (வயது 28), சாமிநாதன் (26) ஆகியோரை சிலர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுபற்றி போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அத்துமீறி செயல்பட்டு வரும் சவுடு மண் குவாரி மீதும், தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story