நந்திவரம் கிராமத்தில் ரூ.11 லட்சத்தில் நந்தி தீர்த்த குளம் தூர்வாரும் பணி தீவிரம் பக்தர்கள் மகிழ்ச்சி
1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த நந்தீஸ்வரர் கோவிலின் நந்தி தீர்த்த குளம் பல ஆண்டுகளுக்கு பிறகு ரூ.11 லட்சத்தில் தூர்வாரும் பணி தொடங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் அடங்கிய நந்திவரம் கிராமத்தில் சுமார் 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற சவுந்திர நாயகி சமேத நந்தீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.
இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலையொட்டி நந்தி தீர்த்த குளம் உள்ளது.
இந்த குளத்தின் ஒருபுறம் செடி, கொடிகள் படர்ந்தும், மற்றொரு புறத்தில் குப்பைகள் சேர்ந்தும் குளத்து நீர் மாசுப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது என்றும், எனவே குளத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி குளத்தையும், குளத்துக்கு நீர் வரும் வழிகளையும் தூர்வாரி, குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கை தொடர்பான செய்தி சமீபத்தில் ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் வெளியானது.
ரூ.11 லட்சத்தில் தூர்வாரும் பணி
இந்த செய்தி வெளிவந்த மறுநாளே, அதிகாரிகள் நேரில் வந்து தீர்த்த குளத்தை ஆய்வு செய்தனர். பின்னர் குளத்தை தூர்வாருவதற்கு எவ்வளவு செலவு ஆகும்? என்பதை அதிகாரிகள் கணக்கீடு செய்தனர். இதையடுத்து சமீபத்தில் ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, குளத்தை தூர்வாரும் பணியை தொடங்குவதற்காக டெண்டர்கள் விடப்பட்டது.
இந்த நிலையில் நந்தீஸ்வரர் நந்தி தீர்த்த குளத்தை ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுபற்றி பக்தர்கள் கூறியதாவது:-
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
பல ஆண்டுகளுக்கு பிறகு நந்தி தீர்த்த குளம் தூர்வாரும் பணி தொடங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குளத்தை தூர்வாருவதோடு, குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளையும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பாரபட்சமின்றி அகற்றி, குளத்தை சுற்றி பக்தர்கள் சுற்றிவரும் அளவில் நடைபாதைகள் அமைக்க வேண்டும்.
மேலும் தூர்வாரிய பிறகு குளத்தை சுற்றி பழமை மாறாமல் கருங்கற்களை அடுக்கி, பக்தர்கள் குளத்தில் இறங்குவதற்காக 4 திசைகளிலும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story