போலி ஆவணங்கள் மூலம் சொத்து அபகரிப்பு: எம்.எல்.ஏ.வுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
போலி ஆவணங்கள் மூலம் சொத்தை அபகரித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில், தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை தொகுதியில், முன்னாள் சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். தேர்தலின்போது, தாக்கல் செய்த வேட்புமனுவில், கிண்டி, தொழிலாளர் காலனியில், தன் மனைவி காஞ்சனாவுக்கு சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதுபொய்யான தகவல் ஆகும். இந்த சொத்து, 1959-ம் ஆண்டு கண்ணன் என்பவருக்கு தொழில் மற்றும் வர்த்தகத்துறை ஒதுக்கீடு செய்தது. இந்த கண்ணன், 2015-ம் ஆண்டு இறந்து விட்டார். இவருக்கு 6 மகள்கள், ஒரு மகன் வாரிசுதாரர்களாக உள்ளனர்.
அதிகாரிகள் உடந்தை
வக்கீலான மா.சுப்பிரமணியன், சென்னை மேயராக பதவி வகித்தவர். தற்போது எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். அரசியல் செல்வாக்கு உள்ளவர். இந்த சொத்தை அபகரிக்க வேண்டும் என்பதற்காக, தன் செல்வாக்கை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்துள்ளார். இதன்படி, தன் மனைவியின் பெயருக்கு இந்த சொத்தை மாற்றியுள்ளார். இந்த மோசடிக்கு, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
எனவே, அந்த சொத்தில் இருந்து மா.சுப்பிரமணியனின் குடும்பத்தை வெளியேற்றும்படி தமிழக அரசுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் மனு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
நோட்டீஸ்
இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் இளையபெருமாள் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம், எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story