மர்மநபர்கள் சங்கிலியை பறிக்க முயன்றதால் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கீழே விழுந்து படுகாயம்
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது அந்த பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
பூந்தமல்லி,
ஆவடி, பக்தவச்சலபுரம், பிரகாசம் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 45). ஆவடியில் உள்ள கனரக தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி (43). இவரது தாய் உடல் நலம் சரியில்லாமல் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரிடம் நலம் விசாரிப்பதற்காக கணவன்-மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் போரூருக்கு சென்றனர்.
சங்கிலியை பறிக்க முயன்றனர்
அவரை பார்த்து நலம் விசாரித்து விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தாம்பரம் -மதுரவாயல் பைபாஸ் சாலையில் மதுரவாயல் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் செண்பகவல்லி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
இதைப்பார்த்து சுதாரித்துக்கொண்ட செண்பகவல்லி மர்மநபர்களிடம் இருந்து தனது சங்கிலியை பாதுகாத்துக்கொள்ள அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டார். ஆனாலும் அந்த நபர்கள் விடாமல் அவரிடம் இருந்து சங்கிலியை பறிக்க முயன்றனர். செண்பகவல்லியும் சங்கிலியை விட்டுக்கொடுக்காமல் போராடினார்.
பெண் படுகாயம்
ரவியும் மோட்டார் சைக் கிளை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். மர்மநபர்களுடன் போராடியபோது திடீரென நிலைதடுமாறிய செண்பகவல்லி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதனை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கீழே விழுந்ததில் செண்பகவல்லியின் தலையில் பலத்த காயமும், வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி உடனடியாக தனது மனைவியை மீட்டு சிகிச்சைக்காக நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆபத்தான நிலையில் உள்ள செண்பகவல்லிக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story