மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் ஜப்பான் நாட்டு உதவியுடன் ரூ.325 கோடியில் அறுவை சிகிச்சை அரங்குகள், டீன் மருதுபாண்டியன் தகவல்


மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் ஜப்பான் நாட்டு உதவியுடன் ரூ.325 கோடியில் அறுவை சிகிச்சை அரங்குகள், டீன் மருதுபாண்டியன் தகவல்
x
தினத்தந்தி 8 May 2018 4:15 AM IST (Updated: 8 May 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் ஜப்பான் நாட்டு உதவியுடன் ரூ.325 கோடி மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்குகள் அமைய உள்ளதாக டீன் மருதுபாண்டியன் கூறினார்.

மதுரை,

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் தற்போது இயங்கி வரும் அறுவை சிகிச்சை கூடத்தை இடித்து விட்டு புதிய அறுவை சிகிச்சை கூடம் கட்டப்பட இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் ஒருங்கிணைந்த புதிய அறுவை சிகிச்சை கூடம் கட்டப்பட இருக்கிறது. இதன் கட்டுமான பணிகளுக்கு ரூ.150 கோடியும், உபகரணங்களுக்கு ரூ.175 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. அதற்கு தேவையான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டது. அதுகுறித்து ஜப்பான் குழுவினரும் ஆய்வு நடத்தி விட்டனர்.

புதிதாக அமைய இருக்கும் அறுவை சிகிச்சை அரங்க வளாகத்தில் 26 நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம், 600 பேர் அமரும் வகையில் கல்வி அரங்கம், அதி நவீன கிருமி நீக்கி அறை, அதி நவீன சலவையகம், மயக்கவியல் துறை, சி.டி., எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற நவீன கருவிகள் மற்றும் கார் பார்க்கிங் போன்ற வசதிகள் அமைய இருக்கிறது.

26 அதி நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் ஒரே இடத்தில் அமைவதால் நோயாளிகளுக்கு பல்வேறு சிரமங்கள் குறைகிறது. மேலும் ஒரே நாளில் 70 முதல் 100 வரையிலான அறுவை சிகிச்சைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். கட்டுமான பணிகளை 18 முதல் 24 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முழு செலவையும் ஜப்பான் குழுவினர் ஏற்றுள்ளனர். மேலும் கட்டுமான பணிகளையும் அவர்களே செய்து முடிக்கின்றனர். கட்டுமான பணிகளின் போது, சுற்றுச்சுழல் மாசு ஏற்படாத வகையில் அதனை கண்காணிக்க சிறப்பு குழுவும் அமைக்கப்படுகிறது.

இந்த கட்டுமான பணிக்காக, அறுவை சிகிச்சை கூடம் இடிக்கப்பட உள்ளதால், அதற்கு பதிலாக மகப்பேறு பிரிவின் பழைய கட்டிடத்தில் உள்ள அறுவை சிகிச்சை கூடமும், புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையின் அறுவை சிகிச்சை கூடங்களும் மாற்று ஏற்பாடாக பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story