18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் “தீர்ப்பு எங்களுக்கு பாதகமாக வந்தால் மீண்டும் நீதிமன்றத்துக்கு போக மாட்டோம்”: தங்கதமிழ்செல்வன் பேட்டி


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் “தீர்ப்பு எங்களுக்கு பாதகமாக வந்தால் மீண்டும் நீதிமன்றத்துக்கு போக மாட்டோம்”: தங்கதமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 8 May 2018 4:45 AM IST (Updated: 8 May 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், எங்களுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் மீண்டும் நீதிமன்றத்துக்கு போக மாட்டோம் என்று தேனியில் தங்கதமிழ்செல்வன் பேட்டி அளித்தார்.

தேனி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போடி அருகே உள்ள பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப்பகுதியில், நியூட்ரினோ ஆய்வு மையத்தை கொண்டு வர விடமாட்டேன் என வாக்குறுதி அளித்து தான் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இப்போது மக்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் என தெரியவில்லை. அவர் தொகுதியில் நடக்கும் பிரச்சினை இது.

நீட் தேர்வு வேண்டாம் என கூறி வந்த நிலையில், தமிழ்நாட்டிலேயே நடத்துங்கள் என மக்கள் கூறும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது அரசு. கேரளாவில் அதிக மையங்கள் உள்ளன. தேர்வு எழுத ஆள் இல்லை. தமிழ்நாட்டில் எழுத முடியாமல் வெளிமாநிலங்களுக்கு அனுப்பியுள்ளனர். தேர்வு மையத்துக்கு பிள்ளைகளை அழைத்து சென்ற பெற்றோர் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இனிமேல் இந்த நிலை இருக்க கூடாது.

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் இன்னும் காலியாக உள்ளன. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. தொகுதி மக்களுக்கு எந்த திட்டமும் செய்ய முடியவில்லை. இவ்வளவு அவசரமான வழக்கை காலம் தாழ்த்துவது மனவேதனையாக உள்ளது. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். சாதகமாக வராவிட்டால் நீதி இருக்கிறதா? என்பதே கேள்விக்குறியாகி விடும். ஒரு ஆண்டாக நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் மீண்டும் நீதிமன்றங்களை நம்ப தயாராக இல்லை. மீண்டும் நீதிமன்றங்களுக்கு செல்ல மாட்டோம். இடைத்தேர்தலில் மக்களை சந்திப்போம். மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதை பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story