கோவை மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 40 பேர் கைது


கோவை மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 40 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2018 4:15 AM IST (Updated: 8 May 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தலைமை செயலகத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) முற்றுகையிட போவதாக தமிழக அரசு ஆசிரியர்கள் சங்கம் (ஜாக்டோ) மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் (ஜியோ) ஆகியவற்றின் சார்பில் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளை போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள ஜாக்டோ- ஜியோ சங்கங்களின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய நேற்று அதிகாலை அவர்களது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது பலர் வீடுகளில் இல்லாததால் போலீசார் திரும்பினர்.

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கைது செய்யப்படலாம் என்று முன்கூட்டியே தகவல் பரவியதால் பல நிர்வாகிகள் வீடுகளில் தங்காமல் வெளியிடங்களில் தங்கி இருந்தனர். இருப்பினும் போலீசார் அவர்களை தேடி பிடித்து கைது செய்வதில் மும்முரம் காட்டினர்.

இதில் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜகோபால், பொதுச்செயலாளர் இன்னாசி முத்து, ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், முதுநிலை ஆசிரியர் சங்க நிர்வாகி தமிழ்செல்வன் உள்பட கோவை மாநகரில் மட்டும் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சூலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும், மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான செந்தில்குமாரை நேற்று மாலை 4 மணிக்கு அவரது அலுவலகத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூறியதாவது:-

போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகாலை நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து, தூங்கி கொண்டு இருந்தவர்களை எழுப்பி கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. கோவை மாவட்டத்தில் 40 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இருப்பினும் நாங்கள் திட்டமிட்டப்படி இன்று சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story