கலெக்டர் அலுவலகத்துக்கு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த கிராம மக்கள்
குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.
அப்போது ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள மாங்கரை ஊராட்சி நெட்டியப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வந்து குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். அதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் 600 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். குடிநீர் வசதிக்காக 3 ஆழ்துளை கிணறுகள் அமைக் கப்பட்டுள்ளன. அதில் இருந்த மோட்டார்களை பழுதாகி விட்டதாக கூறி கழற்றி சென்று பல மாதங்களாகியும் இதுவரை பொருத்தவில்லை. இதனால் 5 கி.மீ. சென்று குடிநீர் எடுத்து வரவேண்டியது இருக் கிறது. எனவே, ஆழ்துளை கிணறுகளில் மோட்டாரை பொருத்த வேண்டும், என்றனர்.
சாணார்பட்டி ஒன்றியம் எமக்கலாபுரத்தை சேர்ந்த பழனிவேல் கொடுத்த மனுவில், சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அரசு நிலத்தில் நின்ற புளியமரங்கள், தென்னை மரங்கள் பல வெட்டப்பட்டு விட்டன. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தவிர்த்து மற்ற இடங்களில் நின்ற மரங்களும் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. மேலும் ஏராளமான மரங்கள் உள்ளன. அந்த மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண் டும் என்று கூறியிருந்தார்.
பழனி தாலுகா சலவை தொழிலாளர்கள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், பழனி வரதமாநதி அணையின் உபரி தண்ணீர் கால்வாய் வழியாக சலவை செய்யும் இடத்துக்கு வந்தது. அதை கொண்டு நாங்கள் துணிகளை சலவை செய்து வந்தோம். மேலும் எரமநாயக்கன்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, பொன்னாபுரம், அமரபூண்டி, கணக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கும் குடிநீர் கிடைத்தது. இதற்கிடையே சிலர் மோட்டார்களை வைத்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால் சலவை தொழிலாளர்கள் வேலையிழப்பதோடு, பல கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வடமதுரை அருகேயுள்ள அய்யலூர் பேரூராட்சி கொன்னையம்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலத்தில் வரட்டாற்றை கடக்க முடியாமல் தவிக்கிறோம். எனவே, சாலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
திண்டுக்கல், கொடைக்கானல், குஜிலியம்பாறை உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் மேல்நிலை குடிநீர் தொட்டி ஊழியர் கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். ஓராண்டுக்கு மேலாக சம்பளம் வழங்காத ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட தலைவர் முத்துராஜ் தலைமையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
இதற்கிடையே பழனி தாலுகா சிவகிரிபட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். உடனே அவரை, போலீசார் அப்புறப்படுத்தி விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், கான்கிரீட் கலவை எந்திரம் வைத்து தொழில் செய்வதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாட்கோவில் மனு செய்தேன். 6 நாட்கள் பயிற்சி அளித்த பின்னர் கடன் வழங்கப்படும் என்றனர். ஆனால், இதுவரை பயிற்சி, கடன் வழங்கவில்லை. அதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டதாக கூறினார். பின்னர் அது தொடர்பாக குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தார்.
Related Tags :
Next Story