மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை 15-ந்தேதி முற்றுகையிடும் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவிப்பு


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை 15-ந்தேதி முற்றுகையிடும் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 May 2018 4:30 AM IST (Updated: 8 May 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தை சிறப்பு குழு விசாரிக்க கோரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 15-ந்தேதி நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

திண்டுக்கல், 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக சில வாரங்களுக்கு முன்பே அறிவித்து விட்டனர். இதுவரை அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை கைது செய்துள்ளது. இது தமிழக அரசின் ஆணவப்போக்கையே காட்டுகிறது. அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் உரிய பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

‘நீட்’ தேர்வு அலங்கோலத்துடன் நடந்து முடிந்துள்ளது. ‘நீட்’ தேர்வு பற்றி மாநில அரசுடன், மத்திய அரசு ஆலோசித்ததாக தெரியவில்லை. தமிழகத்தில் இருந்து 1½ லட்சம் பேர் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அதில் 7 ஆயிரம் பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கி உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் பிளஸ்-2 தேர்வு எழுதும் அளவுக்கு தமிழகத்தில் உட்கட்டமைப்பு வசதி உள்ளது. ஆனால், ‘நீட்’ தேர்வுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்துள்ளனர். ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தான் தமிழக அரசால் முடியவில்லை. மத்திய அரசிடம் பேசி, தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருக்கலாம். தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டில் நாளை (இன்று) காவிரி வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த முறையும் மத்திய அரசு உருப்படியான வரைவு திட்டத்தை தாக்கல் செய்யாது. கர்நாடக தேர்தலுக்காக தாமதம் செய்கிறது. மேலும் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா? என்பது சந்தேகமே. ஏனெனில், மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்துக்கு எந்த நல்ல விஷயங்களையும் செய்யவில்லை.

கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை, கவர்னர் அமைத்த விசாரணை ஆணையம் விசாரித்து 15-ந்தேதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வழக்கை தீவிரமாக விசாரித்ததாக தெரியவில்லை. இதில் 2 பேரை மட்டும் கைது செய்து, வழக்கை முடிக்க பார்க்கிறார்கள்.

கவர்னர் மாளிகை, கல்வித்துறை அதிகாரிகள், துணை வேந்தர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதாக நிர்மலாதேவியே கூறுகிறார். அதனால்தான் கவர்னர் பதவி விலக வேண்டும் என்று கூறுகிறோம். ஐகோர்ட்டு அறிவுரையின்பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். இதற்காக வருகிற 15-ந்தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருக்கிறோம்.

தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் முடக்கி விட்டன. ஏரிகள், கால்வாய்களை தூர்வாருவது இல்லை. நீர்நிலைகளை பாதுகாக்க அரசு தவறிவிட்டது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை முன்னிறுத்தி அடுத்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 6 இடங்களில் இருந்து பிரசார பயணம் மேற்கொள்கிறோம். இறுதியில் திருச்சியில் அனைவரும் ஒன்று சேர்கிறோம். அதில் பங்கேற்க சீத்தாராம்யெச்சூரிக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story