புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: காங்கிரஸ் பிரமுகர் கொலையில் 4 பேர் சிக்கினர்


புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: காங்கிரஸ் பிரமுகர் கொலையில் 4 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 8 May 2018 5:45 AM IST (Updated: 8 May 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் பிரமுகர் கொலை தொடர்பாக போலீசாரிடம் 4 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

புதுச்சேரி,

புதுவை குருசுக்குப்பம் மரவாடி தெருவை சேர்ந்த காங்கிரஸ் மீனவர் அணி செயலாளரான பாண்டியன் (வயது 42) நேற்று முன்தினம் அதிகாலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாண்டியனின் உறவினர் ராஜ்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதாவது வைத்திக்குப்பத்தை சேர்ந்த நாராயணன், ராஜ்பிரபு, சுடுகாட்டான், வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த ஞானவேலு ஆகியோர் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதில் ராஜ்பிரபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகரும், ஆம்புலன்சு டிரைவருமான மாறனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மாறன் கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது கொலை செய்யப்பட்ட பாண்டியன் மூர்த்திக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாறன் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு பாண்டியன் ஆதரவாக செயல்பட்டதாகவும் எதிர் அணியினர் கருதி வந்துள்ளனர்.

இது தவிர மார்க்கெட் பகுதியில் தொழில் செய்வது தொடர்பாகவும் இரு தரப்பினருக்கும் இடையே தகராறுகள் இருந்து வந்துள்ளது. மாறன் கொலைக்கு பின்னர் பாண்டியனின் கை ஓங்க தொடங்கியுள்ளது. இது எதிர் தரப்பினருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே அவர்களே திட்டமிட்டு இந்த கொலையை செய்திருக்கக்கூடும் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் போலீஸ் பிடியில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசாருக்கு கிடைத்த தகவல்கள் உறுதியாகும்பட்சத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தால் வைத்திக்குப்பம், குருசுக்குப்பம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

Next Story