அதிகம் அறியப்படாத வாய்ப்புகள் நிறைந்த ஐ.டி.ஐ. படிப்புகள்!


அதிகம் அறியப்படாத வாய்ப்புகள் நிறைந்த ஐ.டி.ஐ. படிப்புகள்!
x

பட்டப் படிப்புகளைவிட வாய்ப்பு மிக்கதாக டிப்ளமோ படிப்புகள் இருப்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தொழிற்சாலைகள் மற்றும் சிறுதொழில் மையங்களில் ஏற்படும் பணிகளுக்கான பயிற்சிகளை வழங்கும் ஐ.டி.ஐ. டிப்ளமோ படிப்புகளும் வாய்ப்புகள் மிக்கவையே. அதில் சுமார் 50 வகையான படிப்புகள் இந்தியாவில் வழங்கப்படுகின்றன. எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக், கார்பெண்டர் என நாம் அறிந்த ஐ.டி.ஐ. படிப்புகள் ஒரு சில மட்டுமே. மேலும் சில வாய்ப்புகள் நிறைந்த ஐ.டி.ஐ. படிப்புகளைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்....

முன்னதாக ஐ.டி.ஐ. பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். ஐ.டி.ஐ. படிப்புகள் பெரும்பாலும் பாடப்பகுதிகள் குறைந்த, பயிற்சி நிறைந்த படிப்புகளாகும். இவற்றை படிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதியே போதும். பல படிப்புகளை 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் படிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மிகுதியான ஐ.டி.ஐ. படிப்புகளில் சேர்க்கப்படுகிறார்கள். தனியார் நிறுவனங்கள் இந்த குறைந்தபட்ச கல்வியில் தேர்ச்சி பெறாதவர்களைக்கூட மாணவர் சேர்க்கையில் இடம் பெறச் செய்து பயிற்சி வழங்குகின்றன. ஓராண்டு, 2 ஆண்டு படிப்புகள் இருக்கின்றன. பல பயிற்சிகளை அரசாங்கமே 6 மாத பயிற்சியாக வழங்கி சான்றிதழ் தருவதும் உண்டு. எனவே குறைவான மதிப்பெண் பெறுவதாக வருத்தப்படும் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் தங்கள் குறைந்தைகளை பயிற்சிப் படிப்பான ஐ.டி.ஐ. படிப்புகளில் சேர்த்து பிரகாசமான வாய்ப்புகளை தேடிக்கொள்ளலாம்.

அனைவரும் அறிந்த எலக்ட்ரீசியன், பிட்டர், கார்பெண்டர், பிளம்பர், மெக்கானிக், வெல்டர், டர்னர் போன்ற படிப்புகளைப் பற்றி உங்களுக்கு அதிகம் விளக்க வேண்டியதில்லை. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம். இவை பெரும்பாலும் 2 ஆண்டுகள் கொண்ட படிப்புகளாகும். அனைத்து நிறுவனங்களிலும் இந்த பணிகளுக்கு வாய்ப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கும். சிறுதொழில் தொடங்கும் வாய்ப்புகளும், உபரி வருமானம் ஈட்டும் தொழில்களாகவும் இவை உள்ளன.

இனி அதிகம் அறியப்படாத சில ஐ.டி.ஐ. படிப்புகளை அறிவோம்...

பேட்டன் மேக்கர்

8-ம் வகுப்பு தேர்சசி பெற்றவர்கள் இந்த படிப்பை தேர்வு செய்யலாம். 2 ஆண்டு படிப்பு இது. மரப்பலகைகள், பிளாஸ்டிக், உலோகங்கள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், துணி, ரப்பர், தோல் போன்றவற்றைக் கொண்டு உருவங்கள், வடிவங்கள் உருவாக்குவது பற்றிய படிப்பு இது. கம்பெனி லோேகா, நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களுக்கான மோல்டுகள் தயாரிப்பு மற்றும் விதவிதமான உற்பத்தி பொருட்களை வடிவமைத்தல் போன்ற பலவித பணி வாய்ப்புகளைக் கொண்டது இந்த படிப்பு. எனவே குடிசைத் தொழில் நிறுவனங்கள் முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் வரை வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதை கலைத் தொழிலாகவும், கைத்தொழிலாகவும் செய்து சாதிக்க முடியும். குஜராத், அரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற 5 மாநிலங்களில் மட்டுமே இந்த படிப்புகள் வழங்கப்படுவதால் தமிழக மாணவர்கள் இதை அதிகம் அறிந்திருப்பதில்லை. இதனுடன் நெருங்கிய தொடர்புடைய மற்றொரு ஐ.டி.ஐ. படிப்பு மோல்டர். இதுவும் 2 ஆண்டு படிப்புதான். 6 மாநிலங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. வாய்ப்புகள் நிறைந்த இந்த படிப்பை தேர்வு செய்தால் எதிர்கால வாய்ப்புகள் பிரகாசமாகும் என்பதில் சந்தேகமில்லை.

டூல் அண்ட் டை மேக்கர்

கருவிப் பெட்டிகள், கருவிகள், போல்ட் நட்டுகள், ஸ்குரூக்கள், டிரைவர்கள், எந்திர மோல்டுகள், அளவிகள் தயாரிப்பது பற்றிய படிப்பு இது. தொழிற்சாலைகள் தோறும் இதற்கான வேலை வாய்ப்புகள் அதிகம். சண்டிகார், டெல்லி, அரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் இந்த படிப்புகள் வழங்கப்படுகிறது. ஓராண்டு காலத்தில் இதை படிக்க முடியும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதை தேர்வு செய்து படிக்கலாம். தற்போது இதில் 3 ஆண்டு காலத்தைக் கொண்ட அட்வான்ஸ்டு படிப்புகளும் அறிமுகமாகி உள்ளன.

கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மெக்கானிக்

எங்கும் கணினிகளின் ஆதிக்கம் பெருகி வருவதால் கணினி சார்ந்த ஐ.டி.ஐ. படிப்புகளான கம்ப்யூட்டர் புரோகிராமிங் அசிஸ்டன்ட், ஹார்டுவேர் மெக்கானிக் போன்ற படிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. ஹார்டுவேர் பயிற்சியை சில பயிற்சிக்கூடங்கள் குறைந்த கால பயிற்சியாகவும், கோடைப் பயிற்சியாகவும் வழங்குகின்றன. இதை டிப்ளமோ படிப்பாக தேர்வு செய்து படிப்பது நல்ல வேலைவாய்ப்பையும், சுயதொழில் வாய்ப்பையும் உருவாக்கக் கூடியது. 2 ஆண்டு படிப்புகளும், 3 ஆண்டு படிப்புகளும் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் இந்த படிப்புகள் வழங்கும் கல்வி மையங்கள் உள்ளன. கோவையில் பெண்களுக்கான அரசு ஐ.டி.ஐ. கல்வி மையத்திலும் இந்த பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வாட்ச் மெக்கானிக்


நல்ல சுயதொழில் வாய்ப்புகளைக் கொண்டது ‘வாட்ச் மற்றும் கிளாக் மெக்கானிக்’ படிப்பு. ஸ்மார்ட்போன்கள் அதிகரித்த பிறகு கைக்கெடிகாரங்கள் புழக்கம் சற்று குறைந்து போனது உண்மையே. ஆனால் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் அழகிய சுவர்க்கெடிகாரங்கள் இன்றும் அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஸ்மார்ட்போன்களை ஓரம் கட்டும் வகையில் அணிகருவிகளான ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பேண்ட் சாதனங்கள் பெருகி வருகின்றன. எனவே எதிர்காலத்தில் வாட்ச் மெக்கானிசம் தெரிந்தால் நல்ல வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம். கேரளாவில் இதற்கான ஐ.டி.ஐ. படிப்பு படிக்க முடியும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால்போதும். இதேபோல ரேடியோ மற்றும் டி.வி. மெக்கானிஷமும் நல்ல வாய்ப்புகள் கொண்ட தொழிலாக உள்ளது.

இன்டீரியர் டெக்கரேஷன் அண்ட் டிசைனிங்


நாகரீக வளர்ச்சியால் கலை நயமிக்க கட்டுமானங்கள் வேகமாக பெருகி வருகிறது. கிராமப்புறங்களிலும் தனித்துவம் மிக்க அழகுடன் வீடுகளை கட்டுவதை மக்கள் விரும்புகிறார்கள். கட்டிடங்களின் உட்புறத்தையும் நேர்த்தியாக அலங்கரிப்பது ஒவ்வொருவரின் ஆசையாக உள்ளது. இதை டிப்ளமோ படிப்பாக படித்தால் பிரகாசமான வேலைவாய்ப்புகள் உறுதி. கட்டுமான நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்கூடங்கள் என எங்கும் இன்டீரியர் டெக்கரேட்டர்களின் தேவை உள்ளது. எதையும் அழகாக்க விரும்புபவர்கள் இந்த படிப்பை தேர்வு செய்து மனநிறைவுடன் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இதை படிக்க முடியும்.

சர்வேயர்

நில அளவையர் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ஓராண்டில் நில அளவையர் படிப்பை முடித்து வேலையை எதிர்பார்க்கலாம்.

வாய்ப்புகள் நிறைந்த இந்த ஐ.டி.ஐ. படிப்புகளை தேர்வு செய்து படித்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வாழ்த்துக்கள்!

Next Story