மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 134 பேர் கைது


மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 134 பேர் கைது
x
தினத்தந்தி 9 May 2018 3:45 AM IST (Updated: 9 May 2018 12:02 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 134 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தைஅமல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேற்று முன்தினம் மாலை முதல் சென்னைக்கு புறப்பட்டுச்சென்றனர். எனினும் இந்த போராட்டத்திற்கு அனுமதியில்லாததால் ஜாக்டோ- ஜியோ அமைப்பினரை முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர்.

அதன்படி கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை செல்லும் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஊட்டி, கோவை, ஈரோடு பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் பிடித்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். ஆனால் அங்கு போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் அரசு ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். அதில் பஸ் வசதி இல்லாமல் மாடூர் கிராமம் அருகில் 25 பேர் மட்டும் நின்றனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் 16 பெண்கள் உள்பட 25 பேரை கைது செய்து, மீண்டும் அதே மண்டபத்தில் அடைத்தனர்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் வழியாக சென்னைக்கு கார், பஸ்களில் செல்ல முயன்ற திருச்சியை சேர்ந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 48 பேரை உளுந்தூர்பேட்டையிலும், நாகப்பட்டினத்தை சேர்ந்த 24 பேரை அனுமந்தை என்ற இடத்திலும், திருச்சியை சேர்ந்த 37 பேரை ஓங்கூரிலும் என மாவட்டத்தில் 134 பேரை போலீசார் கைது செய்தனர். 23 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story