கோவில்பட்டியில் நாளை மறுநாள் முதல்–அமைச்சர் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு


கோவில்பட்டியில் நாளை மறுநாள் முதல்–அமைச்சர் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு
x
தினத்தந்தி 9 May 2018 3:30 AM IST (Updated: 9 May 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் அரசு விழாவுக்கான ஏற்பாடுகளை நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் அரசு விழாவுக்கான ஏற்பாடுகளை நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

முதல்–அமைச்சர் பங்கேற்கும் விழா

கோவில்பட்டியில் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் நிறைவேற்றப்பட்ட 2–வது குடிநீர் திட்டத்தை முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கோவில்பட்டி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று மாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர்கள் பிரசாந்த் (தூத்துக்குடி), லாவண்யா, சத்யா (பயிற்சி), செழியன் (கோவில்பட்டி பொறுப்பு), தாசில்தார் பரமசிவன், மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–

இலவச ஸ்கூட்டர்

மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011–ம் ஆண்டு தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, தூத்துக்குடியில் 4–வது குடிநீர் திட்டமும், கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்டமும், உடன்குடியில் அனல்மின் நிலைய திட்டமும் அறிவித்தார். அதன்படி தூத்துக்குடியில் ரூ.298 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட 4–வது குடிநீர் திட்டத்தை கடந்த ஆண்டு முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி நகர மக்களின் 40 ஆண்டு கனவு திட்டமான 2–வது குடிநீர் திட்டமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனை முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அவர், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் மற்றும் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ரூ.128 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள புதிய அரசு கட்டிடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார்.

கூட்டு குடிநீர் திட்டம்

வானம் பார்த்த பூமியான கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 யூனியன்களில் உள்ள 248 பஞ்சாயத்துகளுக்கு தாமிரபரணி நிரந்தர குடிநீர் வழங்கும் வகையில், ரூ.102 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவுபெற்று உள்ளது. இன்னும் 6 மாதங்களில் இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதும், இந்த திட்டத்தையும் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார்.

உளுந்து பயிரிட்ட விவசாயிகள் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ மோகன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story