அரியவகை மீன்களை கடத்திச்சென்ற 3 கல்லூரி மாணவர்களுக்கு ரூ.22 ஆயிரம் அபராதம்
அரியவகை மீன்களை திருட்டுத்தனமாக பிடித்து வேனில் கடத்திச்சென்று வெளிமாநிலத்துக்கு விற்க முயன்ற கல்லூரி மாணவர்கள் 3 பேரை மீன்வளத்துறை அதிகாரிகள் பிடித்து அபராதம் விதித்தனர்.
தண்டராம்பட்டு
திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக சாத்தனூர் அணை விளங்குகிறது. இந்த அணையில் கட்லா, ஜிலேபி, வாளை, மீசை விரால், ரோகு, அரசகுஞ்சி, நெத்திலி மற்றும் எட்ரோபீளாஸ் எனப்படும் அரிய வகை மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மீன்கள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றில் எட்ரோபீளாஸ் என்ற மீன்கள் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் வடபெண்ணை ஆறு மற்றும் தமிழகம் வழியாக ஓடும் தென்பெண்ணை ஆற்றில் மட்டுமே கிடைக்கிறது. ஏலம் விடுவதற்காக வளர்க்கப்படும் இந்த மீன்களை சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள பெரிய தண்டா, வேப்பூர் செக்கடி, மலமஞ்சனூர், பிச்சூர் போன்ற கிராம பகுதியில் சிலர் திருட்டுத் தனமாக பிடித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட கிராம மக்களை மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதனை மீறி மீன்கள் திருட்டுத்தனமாக பிடிக்கப்பட்டு விற்கப்படுகிறது.
இவ்வாறு விற்கப்படும் எட்ரோபீளாஸ் மீன்களை கிலோ ரூ.60-க்கு வாங்குவோர் அவற்றை கேரளா, மேற்குவங்காளம், கர்நாடகா மாநிலங்களுக்கு கொண்டு சென்று கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்கின்றனர். கேரளாவில் எட்ரோபீளாஸ் மீன்களை கறி மீன் என்றும் அழைக்கின்றனர். எனவே, இந்த எட்ரோபீளாஸ் மீன்கள் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சாத்தனூர் அணை மீன்வளத்துறை துணை மேலாளர் ராஜன் மற்றும் ஊழியர்கள் திருவண்ணாமலை நோக்கி செல்லும் வாகனங்களை தணிக்கை செய்தனர்.
அப்போது ஒரு சரக்கு வேன் நிற்காமல் சென்று உள்ளது. அதனை மீன்வளத்துறை அதிகாரிகள் விரட்டி சென்று நல்லவன்பாளையம் என்ற இடத்தில் மடக்கினர். அந்த வேனில் 3 கல்லூரி மாணவர்கள் இருந்தனர். வேனை சோதனையிட்டபோது 150 கிலோ எட்ரோபீளாஸ் மீன்கள் இருந்தன. இது குறித்து மீன்வளத்துறை துணை மேலாளர் ராஜன், சாத்தனூர் போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.
சரக்கு வேன் பிடிப்பட்ட இடம் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் புகாரை திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் கொடுக்க சொல்லி உள்ளனர். போலீசார் அறிவுரையின்பேரில், மீன் வளத்துறை அதிகாரிகளே விசாரித்து பிடிபட்ட பெரிய தண்டா கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேரிடம் இருந்து ரூ.22 ஆயிரத்தை அபராதமாக விதித்து வசூலித்தனர்.
Related Tags :
Next Story