வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
போளூரில் வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்
போளூர் அருகே சாலையனூர் மதுரா ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் அனுசுயா (வயது 19). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார்.
இவருக்கும் லாடவரம் கிராமத்தை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் சதீஷ்குமாருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி திருமணம் நடந்தது. பட்டதாரியான சதீஷ்குமார் விழுப்புரம் மாவட்டத்தில் வேலை செய்து வருகிறார். திருமணமாகி 20 நாட்களே இவர்கள் சந்தோஷமாக இருந்து உள்ளனர்.
இந்த நிலையில் சதீஷ்குமார், அவரது தந்தை சேட்டு, தாய் பச்சையம்மாள் ஆகியோர் அனுசுயாவிடம் ரூ.6 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதியன்று பணம், நகையுடன் வா என்று கூறி வீட்டை விட்டு துரத்தி விட்டதாக தெரிகிறது.
எனவே அனுசுயா தாய் வீட்டிற்கு சென்று அங்கே இருந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி மாலை சதீஷ்குமார், அவரது தந்தை சேட்டு, தாய் பச்சையம்மாள் மற்றும் உறவினர் கணேசன் ஆகியோர் அனுசுயாவின் வீட்டிற்கு சென்று அங்கு அவரை அடித்து துன்புறுத்தி தாலியை பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அனுசுயா மாவட்ட சமூக நலத்துறைக்கு புகார் அனுப்பினார். சமூக நலத்துறை அலுவலர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்படி சதீஷ்குமார், அவரது தந்தை சேட்டு, தாய் பச்சையம்மாள் மற்றும் உறவினர் கணேசன் ஆகியோர் மீது போளூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story