திருச்சியில் விபரீதம்: ‘நூடுல்ஸ்’ செய்துதர தாய் மறுப்பு; நர்சிங் மாணவி தற்கொலை


திருச்சியில் விபரீதம்: ‘நூடுல்ஸ்’ செய்துதர தாய் மறுப்பு; நர்சிங் மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2018 3:45 AM IST (Updated: 9 May 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ‘நூடுல்ஸ்‘ செய்துதர தாய் மறுத்ததால் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி,

திருச்சி திருவானைக்கால் சக்திநகரை சேர்ந்தவர் மதன்குமார்-அனிதா தம்பதியின் மகள் சசிபாவனி(வயது20). இவர், தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் நர்சிங் படித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதன்குமார் இறந்து விட்டார். எனவே, தாயாரான அனிதா, ஓட்டலில் வேலை செய்து மகளை படிக்க வைத்து வந்தார்.

சசிபவானி சரிவர படிக்காமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் அனிதா சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, சசிபவானி தனக்கு ‘நூடுல்ஸ்‘ சாப்பிட ஆசையாக உள்ளது. எனவே, ‘நூடுல்ஸ்‘ சமைத்து தருமாறு தாயாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

விஷம் தின்று தற்கொலை

அப்போது தாயார் அனிதா, ஒழுங்காக படிக்க மாட்டேன் என்கிறாய். எனவே, உனக்கு ‘நூடுல்ஸ்‘ சமைத்து தரமாட்டேன் என கூறி இருக்கிறார். ஆசையாக கேட்டதை தாயார் சமைத்து தரமாட்டேன் என்றதும் சசிபவானி மனமுடைந்தார். உடனே வீட்டில் இருந்த எலிமருந்தை தின்று விட்டு மயங்கி விழுந்தார்.

அதைப்பார்த்து பதறிபோன அனிதா, மகளை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சசிபவானி உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story