எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் கலெக்டர் பேச்சு


எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 9 May 2018 4:15 AM IST (Updated: 9 May 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

கரூர்,

கரூரில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் எரிசக்தி கணக்கீடு மற்றும் எரிசக்தி சேமிப்பினை மேம்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் கலெக்டர் பேசியதாவது:-

தொழில் நிறுவனங்கள் எரிசக்தி ஆற்றல் கணக்கீடு மற்றும் சேமிப்பு தொடர்பான நுட்பங்களைப்பெற்று, தமது பொருட்களின் உற்பத்தி செலவினை குறைத்து, சந்தை போட்டிகளில் நிலைத்து நிற்க வேண்டும். மேலும், தொழிற்சாலைகள் மட்டுமின்றி ஒவ்வொரு வீட்டிலும் எரிசக்தி மற்றும் மின்சக்தியை சேமிக்கலாம்.

மின்சாரத்தை சேமிக்க தவறினால் மீண்டும் பழைய நிலைக்கே செல்லும் காலம் வந்துவிடும். எரிவாயு 60 ஆண்டுகளுக்கும், எரிபொருள் 40 ஆண்டுகளுக்கும் பயன்படுத்தும் அளவே உலகில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, நம் வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து எரிபொருள், எரிசக்திகளை சிக்கனமாக பயன்படுத்துவதுடன் காற்றாலை மின்சக்தி, சூரிய மின்சக்திகளை அனைவரும் பயன்படுத்த முன்வர வேண்டும். எரி சக்தியை சிக்கனமாக பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து தற்போதைய எரிசக்தி உபயோகத்தின் புள்ளி விவரத்தினை திரையில் படவிளக்கங்களுடன் சுட்டிகாட்டி தேசிய உற்பத்தி திறன் குழு முன்னாள் இயக்குனர் தர்மலிங்கம் பேசும்போது, வருங்கால சந்ததியினருக்கு எரிசக்திக்கும், தண்ணீருக்கும் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாக வாய்ப்பிருக்கிறது. எனவே தொழிற்சாலைகளில், தொழில் நிறுவனங்களில் எரிசக்தியை தணிக்கை செய்து மிச்சப்படுத்துவதற்கு என ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.

கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பரமேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story