புழல் ஏரிக்கரையோரம் குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் அவதி நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
புழல் ஏரிக்கரையோரம் கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்படுவதால் சுவாசக்கோளாறால் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
செங்குன்றம்,
சென்னையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது செங்குன்றம் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
செங்குன்றத்தில் 150-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும், நெற்களங்களும் உள்ளன. இங்கிருந்து தான் சென்னைக்கு அரிசி வழங்கப்படுகிறது. சென்னை பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு குடிநீர் தேவைக்காக 1881-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் புழல் ஏரி உருவாக்கப்பட்டது. பின்னர் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து இந்த ஏரி சீரமைக்கப்பட்டது. இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்
செங்குன்றம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தினமும் 10 டன்னுக்கும் அதிகமாக குப்பைகள் உருவாகின்றன. இந்த குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் டிராக்டர்கள் மூலம் கொண்டு வந்து புழல் ஏரி நீர்த்தேக்கம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டி வருகிறது.
இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் புகை மண்டலம் ஏற்பட்டு சென்னையில் இருந்து செங்குன்றத்திற்கு செல்லும் வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
புகையால் அவதி
இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என பல்வேறு கட்சியினர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொது நலச்சங்கங்கள் சார்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்த புழல் ஏரிக்கரை சுமார் 8 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் இங்கு நடை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பையில் இருந்து வெளியாகும் புகையால் இவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நடை பயிற்சி செய்ய செங்குன்றத்தில் வேறு இடமும் கிடையாது.
மூடப்பட்ட கால்வாய்
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, தற்போதைய எம்.எல்.ஏ சுதர்சனம் ஆகியோரிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மேலும் புழல் ஏரி நிரம்பும்போது உபரிநீர் ஷட்டர்கள் மூலம் திறந்துவிடும்போது 400 மீட்டருக்கு மேல் அகலம் கொண்ட கால்வாய் வழியாக வடகரை, வடபெரும்பாக்கம், ஆண்டார்குப்பம் வழியாக எண்ணூர் கடலில் சென்றடையும்.
தற்போது 400 மீட்டர் கால்வாயில் புழல் ஏரிக்கரை அருகே இந்த குப்பைகளை கொட்டி கால்வாயின் பெரும்பகுதியை மூடிவிட்டனர். பருவமழை பெய்து ஏரி நிரம்பினால் உபரிநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி நேரடியாக வந்து இதனை ஆய்வு செய்தார். அப்போது இந்த குப்பைகளை இங்கிருந்து அகற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
அதிகாரி பதில்
குப்பைகள் எரிக்கப்படுவது குறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாவட்ட நிர்வாகத்திடம் குப்பை கொட்ட மாற்று இடம் கேட்டு பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றியும், மாவட்ட நிர்வாகம் அலட்சியப்போக்கை காட்டுகிறது. இருந்தாலும் குப்பைகளை கொட்ட மாற்று இடங்கள் தேர்வு செய்தோம். இதற்காக பம்மதுகுளம், அலமாதி ஆகிய பகுதிகளை தேர்வு செய்து அங்கு குப்பைகளை கொட்ட சென்றோம். ஆனால் அப்பகுதி மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டங்கள் நடத்தியதால் அந்த நடவடிக்கையை கைவிட்டு விட்டோம்’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து புழல் பகுதியை சேர்ந்த பாலமுருகன் கூறியதாவது:-
விபத்துக்களுக்கு காரணம்
தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உருவாகும் புகை மண்டலத்தால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து செல்வோர் பலர் வழி தெரியாமல் விபத்துக்களில் சிக்கி கை, கால்களை இழந்துள்ளனர்.
மேலும் செங்குன்றத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகாரர்கள், இறைச்சி கழிவுகளை ஏரிக்கரையோரம் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு நோய்கள் உருவாகிறது. அரசு நேரடியாக தலையிட்டு செங்குன்றம் பொதுமக்கள் மட்டும் இல்லாது வெளியூரில் இருந்து வரும் பொதுமக்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆசிரியை தமிழரசி ராஜசேகர் கூறியதாவது:-
முதல்-அமைச்சருக்கு புகார்
பிரதான சாலையான ஜி.என்.டி. சாலையோரமாக குப்பைகள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பல்வேறு கழிவுகளும் கொட்டுவதால் அந்த வழியாக பஸ்சில் செல்லும் பெண்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். சில கர்ப்பிணிகளுக்கு இந்த புகை மண்டலத்தால் சுவாசக்கோளாறு ஏற்பட்டு செங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வருகின்றனர்.
ஆரம்பத்தில் சிறிய குவியலாக இருந்த குப்பைமேடு தற்போது கொருக்குப்பேட்டை குப்பைமேட்டை விட பெரியதாகி விட்டது. பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் முதல்-அமைச்சர் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமூக ஆர்வலர் ரமேஷ் கூறியதாவது:-
பல்வேறு நோய்கள்
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாதவரம் எம்.எல்.ஏ மாதவரம் சுதர்சனம் கொட்டப்பட்டு வரும் குப்பை மேட்டின் மீதே பொதுமக்களுடன் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். உடனே குப்பையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. செங்குன்றத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் இந்த குப்பைமேட்டை கடந்துதான் சென்னைக்கு செல்ல வேண்டும். இந்த புகை மண்டலத்தில் சிக்கி அவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இனிமேலாவது சுகாதாரத்துறையை சேர்ந்தவர்களும், மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்களும் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story