‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தை தடைசெய்ய வேண்டும் கமிஷனர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை தடைசெய்ய கோரி கமிஷனர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு கொடுத்துள்ளனர்.
சென்னை,
நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருநங்கைகளும் அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை ‘தோஸ்த்’ என்ற அமைப்பை சேர்ந்த திருநங்கை சாசா, எழுத்தாளர் திருநங்கை அப்சரா ஆகிய இருவரும் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்ற படத்தின் தலைப்பே ஆபாசமாக உள்ளது. அந்தபடத்தில் திருநங்கைகளை ஆபாசமாகவும், இழிவாகவும் சித்தரித்து காட்சிகள் உள்ளன. அந்த காட்சிகளை அகற்ற வேண்டும் அல்லது ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தையே தடைசெய்ய வேண்டும். அந்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் திருநங்கைகளிடம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். நாங்கள் கொடுத்துள்ள மனுவை சென்சார் குழுவிற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்சார் குழுவில் திருநங்கைகளையும் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். அப்போது தான் திருநங்கைகள் திரைப்படத்தில் இழிவுபடுத்தப்படும் காட்சிகள் வராமல் தடுக்கப்படும். இந்த படம் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளோம். திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷாலை சந்திக்க சென்றோம். அவரும் எங்களை சந்திப்பதாக கூறியிருந்தார். ஆனால் கடைசிநேரத்தில் அவர் எங்களை சந்திக்கவில்லை. அவரது செயலாளர் மூலம் நாங்கள் கொடுத்த மனுவை பெற்றுக்கொண்டார். ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் இடம்பெற்றுள்ள திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சி அகற்றப்படும்வரை நாங்கள் ஓயமாட்டோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story