குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி பரிகார பூஜை நடத்திய இளம்பெண் 30 பவுன்-பணத்துடன் மாயம்


குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி பரிகார பூஜை நடத்திய இளம்பெண் 30 பவுன்-பணத்துடன் மாயம்
x
தினத்தந்தி 9 May 2018 4:00 AM IST (Updated: 9 May 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

தோழியின் குடும்ப பிரச்சினையை தீர்ப்பதாக கூறி பரிகார பூஜை நடத்திய இளம்பெண், 30 பவுன் நகை- பணத்தை திருடிக்கொண்டு மாயமானார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

அழகியமண்டபம்,

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் முருகேசன், கட்டிட தொழிலாளி. கேரளாவில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி லீலா மேரி.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூர் செல்வதற்காக திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு இளம்பெண் லீலா மேரியிடம் நைசாக பேச்சு கொடுத்து அறிமுகம் ஆனார்.

லீலா மேரியின் குடும்ப சூழ்நிலையை ஒவ்வொன்றாக கேட்டு அவருக்கு அந்த பெண் ஆறுதல் கூறினார். இதன்பின்பு இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி தோழிகள் ஆனார்கள். அப்போது, லீலாமேரிக்கு மாந்திரீகத்தில் நம்பிக்கை இருப்பதையும் அந்த பெண் அறிந்து கொண்டார்.

தனக்கு மாந்திரிக வேலைகள் தெரியும் என்றும் பரிகார பூஜைகள் செய்தால் உங்கள் வீட்டில் உள்ள பிரச்சினைகள் தீரும் என்றும் லீலா மேரியிடம் கூறினார்.

அதனை நம்பி லீலா மேரி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்தார். பூஜையின் போது, வீட்டில் உள்ள நகைகள், ரொக்க பணம் ஆகியவற்றை வைக்க வேண்டும் என்றும், பூஜைகள் முடிந்த பின்பு அவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அந்த பெண் கூறினார். இதை நம்பிய லீலா மேரி வீட்டில் இருந்த 30 பவுன் நகை, பணத்தை எடுத்து பூஜையில் வைத்துள்ளார்.

பூஜை நடந்து கொண்டிருந்த போது, ஏதோ மை போன்ற பொருளை எடுத்து லீலா மேரியின் மீது வைத்ததாகவும், அதன் பின்னர் அவர் மயக்க நிலைக்கு சென்றதாகவும் தெரிகிறது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 30 பவுன் நகை, பணத்தை எடுத்துக் கொண்டு அந்த இளம்பெண் மாயமானார்.

மயக்கம் தெளிந்த பின்னர் லீலாமேரி எழுந்து பார்த்த போதுதான், தோழியாக நடித்து தன்னை ஏமாற்றிய பெண் நகை-பணத்தை அபகரிக்க வந்தவர் என அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, பரிகார பூஜை செய்வதாக கூறி லீலா மேரியை ஏமாற்றி நகை, பணத்தை திருடிய இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Next Story