இப்படியும் வாழ்கிறார்கள்: நடைபாதையில் தங்கி, மூங்கில் பாய் பின்னும் தனக்கோடி
60 வயதிலும் சாலை ஓர நடைபாதையில் தங்கி, மூங்கில் பாய் பின்னி குடும்பத்தை தூக்கிப்பிடிக்கிறார், தனக்கோடி.
அன்றாடம் கூலிக்கு வேலை செய்து வயிற்றை கழுவுகிறோம். வாழ்வில் எந்த சந்தோஷமும் இல்லை என்கின்றனர் ஒரு சாரார்.
கை நிறைய சம்பாதிக்கிறோம். தேவையான அளவுக்கு பணம் இருக்கிறது. இருப்பினும் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை என்கின்றனர் மற்றொரு சாரார். இப்படி ஒவ்வொரு நாளும் இதே வார்த்தையை நாம் பல இடங்களில் கேட்டு இருப்போம்.
ஆனால் கையில் பணம் இல்லை என்றாலும், ஒரு வேளை உணவு கிடைத்தாலும் வாழ்வில் சந்தோஷமே என்றும், இப்படி தான் எங்களுடைய வாழ்க்கையை வாழ்கிறோம் என்றும் புன்முகத்தோடு பகிர்ந்து கொள்கிறார், சென்னை வால்டாக்ஸ் சாலையை சேர்ந்த தனக்கோடி (வயது 60). இவருடைய கணவர் பெயர் கோவிந்தராஜூலு.
கணவர் இறந்துவிட்ட காரணத்தினால், குடும்ப சுமையை தனியாக தூக்கி சுமந்து கொண்டு வெற்றிப்பாதையில் பயணிக்கிறார், தனக்கோடி.
கோவிந்தராஜூலு, தனக்கோடி இருவரின் குடும்பத்தினருக்கும் பூர்வீக தொழில் மூங்கில் பாய், தட்டை, திரை பின்னுவது தான். வருமானம் பெரிய அளவில் இல்லை என்றாலும், தலைமுறை கடந்து இந்த தொழிலை செய்து வருவதாக கூறுகிறார், தனக்கோடி. இதுகுறித்து அவர் கூறியதாவது:-
10-ம் வகுப்பு படித்தவர்
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். சென்னை வால்டாக்ஸ் சாலை ஓர நடைபாதையில் வீடு போல் அமைத்து, தங்கி மூங்கில் கூடை, பாய், தட்டை, திரை பின்னி வருகிறேன்.
என்னுடைய தந்தை, தாய் இதே தொழிலை தான் செய்தனர். அப்போதில் இருந்து அவர்களுடன் சேர்ந்து இந்த தொழிலை கற்றுக்கொண்டேன். நான் அந்த காலத்திலேயே 10-ம் வகுப்பு படித்தேன்.
பெண் பிள்ளைகளை அப்போது யாரும் வேலைக்கு அனுப்ப தயங்கியதால், நான் எந்த பணிக்கும் செல்ல முடியாமல் போய்விட்டது.
இருந்தாலும், அதை எண்ணி நான் கவலைப்பட்டது கிடையாது. திருமணம் முடிந்ததும் நானும், எனது கணவரும் சேர்ந்து இதே தொழிலை தொடர்ந்தோம். எங்களுக்கு சிங்கக்குட்டிகள் போன்று 2 மகன்கள் உள்ளனர். என்னுடைய கணவர் இறந்துவிட்டாலும், நான் மனம் தளராமல் இதே தொழிலை தொடர்ந்து செய்கிறேன்.
நான் மட்டுமல்ல, என்னுடைய மகன்களும் இந்த கால தலைமுறையினருக்கு ஏற்ப எங்கள் தொழிலை முன்னெடுத்து நடத்துகின்றனர். இந்த தொழிலை பொறுத்தவரையில், கோடைகாலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். அதன்பிறகு, வருமானம் குறைவாகவே தான் இருக்கும்.
இப்படிதான் வாழ்கிறேன்
எங்கள் தொழிலை பொறுத்தவரையில் பெரிய அளவில் வருமானம் இருக்காது. கிடைக்கும் வருவாயை வைத்து குடும்பத்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு என்று சொந்த இடம் கிடையாது. நானும், என்னுடைய கணவரும் சேர்ந்து இந்த தொழிலை செய்த போது ரூ.1,000-க்கு காலி இடம் கிடைத்தது. ஆனால் அதன் மீது ஆசை இல்லை.
தினமும் சம்பாதிக்க வேண்டும். கறி, மீன் எடுத்து திருப்திகரமாக சாப்பிட வேண்டும். இது தான் எங்கள் வாழ்க்கை. சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சுத்தமாக இல்லை. ஆனால் என்னுடைய மகன்களுக்கு அதில் ஈடுபாடு இருக்கிறது. அது அவர்களுடைய இஷ்டம். என்னுடைய வாழ்வை நான் இப்படிதான் வாழ்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, ஆங்கிலத்தில் சரியான உச்சரிப்புடன் பட்டைய கிளப்பிய தனக்கோடியிடம், ஆங்கிலம் நன்றாக பேசுவீர்களா? என்று கேட்டதற்கு, எனக்கு தெரிந்த அளவு பேசுகிறேன். வெளிநாட்டுக்காரர்கள் எங்கள் தொழிலை பார்த்து, எப்படி இதையெல்லாம் செய்கிறீர்கள்? என்று கேட்டு, புகைப்படம் எடுத்து செல்வார்கள். அவர்களிடம் நான் ஆங்கிலத்தில் பேசி உரையாடுவேன் என்று புன்னகை பூத்தார்.
Related Tags :
Next Story