தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொ.மு.ச.வினர் மனு


தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொ.மு.ச.வினர் மனு
x
தினத்தந்தி 9 May 2018 4:20 AM IST (Updated: 9 May 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் தொ.மு.ச.வினர் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணை செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக விண்ணப்பித்த கல்வி உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை. அதற்காக சமர்ப்பித்த நலவாரிய அசல் அட்டைகளும் திரும்ப கிடைக்கவில்லை. இதை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நலத்திட்ட உதவிகள், நலத்திட்ட உறுப்பினர் அட்டைகள் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு பெற்றுத்தரப்பட்டது.

ஆனால் தற்போது சங்கங்கள் மூலம் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. இதனை தாங்கள் பரிசீலனை செய்து மீண்டும் சங்கங்கள் மூலம் நலத்திட்ட விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஆவண செய்ய வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழிலாளர் நலவாரிய ஆய்வு கூட்டங்களில் மிக அதிகமாக உறுப்பினர்களை கொண்ட தொ.மு.ச. சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு கடிதங்கள் வழங்குவதில்லை. முறையாக எங்கள் சங்கத்திற்கு கடிதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, சவர தொழிலாளர்களுக்கு உரிய உபகரணங்கள், கட்டிட தொழிலாளர்களுக்கான காலணி, தலைக்கவசம், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உரிய கருவிகள் மற்றும் நலவாரியத்தால் அனுமதிக்கப்பட்ட தொழில் உபகரணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாரியத்தில் பதிவு செய்யாத வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள் வழங்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய கூலியை முறையாக வழங்க வேண்டும். மேலும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உயர்த்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story