அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 1-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 1-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 9 May 2018 5:00 AM IST (Updated: 9 May 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகராட்சி 12-வது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 1-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி 12-வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வகையில் மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பகுதியில் இதுவரை தார்ச்சாலை வசதி இல்லை. இதனால் மழை பெய்யும் போதெல்லாம் அந்த சாலையில் உள்ள மண் அனைத்தும் அங்குள்ள கால்வாய்க்கு சென்று சாக்கடை கால்வாயில் அதிக அளவில் தேங்குகிறது.

இதன் காரணமாக கால்வாய் நிரம்பி வீடுகளுக்குள் கழிவுநீர் சென்று விடுவதாக தெரிகிறது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் முன்னாள் கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று காலை 1-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 1-வது மண்டல உதவி கமிஷனர் வாசுக்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் இதுவரை தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் உள்ள மண் அங்குள்ள சாக்கடை கால்வாய்க்கு சென்று கால்வாய் நிரம்புவதால் கழிவுநீர் அனைத்தும் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே அந்த பகுதியில் உடனடியாக தார்ச்சாலை அமைப்பதுடன், அங்குள்ள சாக்கடை கால்வாயை அடிக்கடி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ராஜீவ்நகரில் சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியை மாற்ற வேண்டும். தற்போது 8 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படும் குடிநீரை சீராக வினியோகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

அவர்களிடம் பேசிய உதவி கமிஷனர் வாசுக்குமார் இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story