கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தாலுகா அலுவலகத்தில் சமையல் செய்து போராட்டம்


கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தாலுகா அலுவலகத்தில் சமையல் செய்து போராட்டம்
x
தினத்தந்தி 9 May 2018 4:20 AM IST (Updated: 9 May 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தாலுகா அலுவலகத்தில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை,

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் 8-ந்தேதி சென்னை கோட்டையில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து உடுமலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அம்சராஜ், உடுமலை வட்டக்கிளை செயலாளர் பாலசுப்பிரமணியம், கிராம உதவியாளர் சங்கத்தை சேர்ந்த திலீப், கிராம உதவியாளர் தம்புராஜ் ஆகிய 4 பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து உடுமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.

அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்தில் உள்ள ஹாலில் அமர வைத்திருந்தனர். இரவும் போலீஸ் நிலையத்திலேயே தங்க வைத்திருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் நேற்று காலை 10.30 மணி அளவில் திடீரென்று போலீஸ் நிலையத்திற்குள்ளேயே கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அத்துடன் தங்களை கைது செய்து 24 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் போலீஸ் நிலையத்திலேயே ஏன் வைத்துள்ளர்கள் என்றும் கேட்டனர்.

போலீஸ் நிலையத்திற்குள் கோஷமிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோதும் கோஷமிட்டனர். தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 4 பேரும் மதியம் 12 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த 4 பேரும் மற்றும் அரசு ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் தாலுகா அலுவலக வளாகத்திற்கு வந்தனர். அவர்கள் சென்னையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று நடந்த போராட்டத்தை தொடர்ந்து எடுக்கப்படும் முடிவை எதிர்பார்த்து அதன்படி செயல்பட காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா அலுவலக வளாகத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.

பின்னர் இரவு 8.30 மணி அளவில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அவர்கள் கலைந்துசென்றனர். 

Next Story