முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 40 பேரை கைது செய்ததை கண்டித்து 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுத்து போராட்டம்


முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 40 பேரை கைது செய்ததை கண்டித்து 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 9 May 2018 4:20 AM IST (Updated: 9 May 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 40 பேரை கைது செய்ததை கண்டித்து 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கோவை,

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் உள்ள தலைமை செயலகம் அமைந்துள்ள கோட்டையை முற்றுகையிட சென்றனர். அதில் ஏராளமானவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் நேற்று நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் செல்லலாம் என்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நேற்று முன்தினம் பலர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டத்தில் 40 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நேற்று காலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 40 பேரை போலீசார் கைது செய்ததை கண்டித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நேற்று ஒருநாள் விடுமுறை எடுத்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக கோவை கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்பட பல அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இது தெரியாமல் அரசு அலுவலகங்களை தேடி சென்ற பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்து மனு கொடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். அத்துடன் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

இது குறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 10 ஆயிரம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அதில் 800 பேர் சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் 40 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் நேற்று 2 ஆயிரம் பேர் ஒருநாள் விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இனியாவது போலீசார் முன்எச்சரிக்கையாக எங்களை கைது செய்ய மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் எங்களின் உரிமையைதான் கேட்கிறோம். ஆனால் அதை அரசு வழங்க மறுக்கிறது. இதன் காரணமாகதான் போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம். எனவே அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து எங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பேசி விரைவில் அறிவிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story