உஸ்மனாபாத் மாவட்டத்தில் பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை
பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை தண்டனையும், அவரது நண்பர்கள் 3 பேருக்கு தலா 22 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து உஸ்மனாபாத் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
உஸ்மனாபாத்,
பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை தண்டனையும், அவரது நண்பர்கள் 3 பேருக்கு தலா 22 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து உஸ்மனாபாத் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பெண் கற்பழிப்பு
உஸ்மனாபாத் மாவட்டம் பிம்பலியை சேர்ந்த வாலிபர் தனஞ்செய் ரசல்(வயது21). கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் தனது நண்பர்களான பாலாஜி டாக்கே(21), பாலாஜி கும்பளே(20) மற்றும் தாதாசாகேப் ஜன்ராவ்(21) ஆகியோருடன் அவரது கிராமம் அருகே சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பெண் ஒருவர் தனியாக வருவதை இவர்கள் 4 பேரும் கவனித்தனர். இதையடுத்து தனஞ்செய் ரசல் அந்த பெண்ணை மிரட்டி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கிச்சென்று இயற்கைக்கு மாறான முறையில் வலுக்கட்டாயமாக உறவு கொண்டார். பின்னர் அவரது நண்பர்கள் 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணை கற்பழித்தனர்.
கடுங்காவல்
இதையடுத்து அவர்கள் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இந்தநிலையில் சம்பவ இடத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற அந்த பெண் இது தொடர்பாக அவரது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் பிம்பலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக மாவட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஆர்.அவுதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் முக்கிய குற்றவாளியான தனஞ்செய் ரசலுக்கு 27 ஆண்டுகளும், பாலாஜி டாக்கே, பாலாஜி கும்பளே மற்றும் தாதாசாகேப் ஜன்ராவ் ஆகியோருக்கு தலா 22 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
இதுதவிர குற்றவாளிகள் அனைவருக்கும் தலா ரூ.52 ஆயிரம் அபராதம் விதித்தும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story