பள்ளி கட்டிட ஆய்வு பணியில் அதிகாரிகள் மெத்தனம்


பள்ளி கட்டிட ஆய்வு பணியில் அதிகாரிகள் மெத்தனம்
x
தினத்தந்தி 9 May 2018 4:37 AM IST (Updated: 9 May 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி கட்டிடங்களைமுறையாக ஆய்வு செய்வதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் சான்று அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்திற்கு பின்னர் தமிழக அரசு ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னர் அனைத்து பள்ளி கட்டிடங்களையும் முறையாக ஆய்வு செய்து அதன் உறுதி தன்மை குறித்து சான்று அளிக்க வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென கல்வித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றின் பயன்பாட்டில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்வதோடு, பள்ளி வளாகங்களில் உள்ள சேதம் அடைந்த கட்டிடங்களை அகற்றுவதற்கும் பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் இந்த ஆய்வு பணியை மேற்கொள்வதில் ஆண்டு தோறும் மெத்தனம் காட்டப்பட்டு வருகிறது. கல்வி ஆண்டு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் இந்த ஆய்வு பணியை தொடங்கும் அதிகாரிகள் குழுவினர் அவசர கதியில் ஆய்வு பணிகளை முடித்து விடுகின்றனர். இதனால் அனைத்து பள்ளி கட்டிடங்களும் ஆய்வு செய்யப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. மேலும் பல பள்ளி வளாகங்களில் சேதம் அடைந்த கட்டிடங்கள் தொடர்ந்து அகற்றப்படாமலேயே இருக்கும் நிலை நீடிக்கிறது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களையும் ஆய்வு செய்து அவற்றின் உறுதி தன்மை பற்றி சான்று அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும் பல தனியார் பள்ளிகளில் மேற்கூரைகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் அமைக்கப்பட்டுள்ளதை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதே போன்று தனியார் பள்ளி வாகனங்களை அதன் தகுதி பற்றி ஆய்வு செய்யவும் வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்கிய பின்பு ஒரே நாளில் அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்து தகுதி பற்றி சான்றிதழ் அளிக்க வட்டார போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது வாடிக்கையாகிவிட்டது. எனவே உரிய காலஅவகாசம் எடுத்து அனைத்து பள்ளி வாகனங்களையும் முறையாக ஆய்வு செய்து தகுதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story