கல்விக்கடன் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்கக் கூடாது, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கல்விக்கடன் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்கக் கூடாது, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 May 2018 5:45 AM IST (Updated: 9 May 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

கல்விக்கடன் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திருச்சி தொட்டியம்பட்டி கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது மகள் அகிலா. பி.எஸ்சி., நர்சிங் படித்து வருகிறார். அவரது படிப்புக்காக கோவில்பட்டி பாண்டியன் கிராம வங்கியில் 2016-ம் ஆண்டு கடன் கேட்டு விண்ணப்பித்தேன். அந்த விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே எனது மகளின் படிப்பை கருத்தில் கொண்டு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் தனது மகளுக்கு கல்விக்கடன் கேட்டு 2016-ம் ஆண்டு விண்ணப்பித்து உள்ளார். அவரது மனுவை வங்கி நிர்வாகம் ஏற்கவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை. நிலுவையில் வைத்துள்ளனர். கல்விக்கடன் கேட்டு கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்து உரிய முடிவெடுக்காமல் காலவரையறையின்றி நிலுவையில் வைத்திருக்கக்கூடாது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லி தெரியவேண்டியது இல்லை. கல்விக்கடன் தொடர்பான வழக்குகளில் விதிகளுக்கு உட்பட்டு கல்விக்கடன் வழங்க வங்கிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது. எனவே அவரது விண்ணப்பத்தின் மீது 2 வாரத்தில் உரிய உத்தரவை வங்கி நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். 

Next Story