அனைத்து தபால் நிலையங்களையும் ஆன்லைன் மூலம் இணைக்கும் திட்டம் தொடக்கம்


அனைத்து தபால் நிலையங்களையும் ஆன்லைன் மூலம் இணைக்கும் திட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 9 May 2018 4:54 AM IST (Updated: 9 May 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் அன்றாட பணிகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் இணைத்து செயல்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய தலைமை தபால்நிலையங்கள், 57 துணை தபால்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் தபால்நிலையங்களை ஒரே நெட்வொர்க்கில் இணைத்து அனைத்து பணிகளையும் ஆன்லைன் மூலம் உடனுக்குடன் செயல்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால்நிலையங்களையும் ஒரே நெட்வொர்க்கில் இணைத்து பண பரிமாற்றம், மணியார்டர், பதிவு தபால் அனுப்புதல் உள்பட அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சி ராமநாதபுரம் தலைமை தபால்நிலையத்தில் நடைபெற்றது. தென்மண்டல அஞ்சல்துறை இயக்குனர் பவன்குமார்சிங் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தென்மண்டல உதவி இயக்குனர் லட்சுமணன், ராமநாதபுரம் தலைமை அஞ்சலக அதிகாரி ராமு, ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங், உதவி கண்காணிப்பாளர் விஜயகோமதி, தலைமை அஞ்சலக கணினி நிர்வாகி அழகேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் அஞ்சல் வட்டத்தில் உள்ள அனைத்து தபால்நிலையங்களிலும் ஒருங்கிணைந்த கணினி செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு ஆன்லைன் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும். இதன்மூலம் தபால்நிலையத்தில் அனைத்து பணிகளும் உடனுக்குடன் நடைபெறும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பண பரிமாற்றம், மின்னஞ்சல் சேவை, நிதி மற்றும் கணக்கியல் சேவைகள், இதர தபால் சேவைகள் அனைத்தும் துல்லியமாக குறித்த நேரத்தில் செய்ய இந்த ஒருங்கிணைந்த கணினி செயல்பாடு திட்டம் பயன்படும். இந்த தகவலை கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் தெரிவித்தார். 

Next Story