அரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்?


அரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்?
x
தினத்தந்தி 9 May 2018 11:15 AM IST (Updated: 9 May 2018 11:02 AM IST)
t-max-icont-min-icon

அன்றைய காலகட்டத்தில் ஒற்றை ஓட்டுக்கட்டிட தொடக்கப் பள்ளியில் 300 முதல் 400 மாணவர்கள் வரை படித்தனர்.

வகுப்புகளில் அவர்கள் படிக்கும் சத்தம் சாலையில் செல்வோருக்கும் கேட்கும். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான தொடக்கப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஒற்றை இலக்க மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டு செயல்படுகிறது.

தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

ஒரு அரசு தொடக்கப்பள்ளி மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.25 ஆயிரம் செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் கொடுத்தும் ஏன் பெற்றோர் அரசு பள்ளிகளை புறக்கணிக்கிறார்கள்? ஏன் அவர்கள் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள்? என்பதும், இதற்கு அரசு பள்ளிகளின் தரம் முக்கிய காரணமாக இருப்பதையும் அரசு நன்றாக அறிந்திருக்கிறது.

அரசு தொடக்கப்பள்ளிகளின் மாணவர்களை சேர்க்க தயங்குவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை, முறையாக பாடம் நடத்துவதில்லை, அரசு பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இருப்பதில்லை என்பது போன்றவை அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தயங்குவதற்கான காரணமாக பெற்றோர் சொல்கிறார்கள். மேலும், தமிழைப்போன்று ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளிகளை தான் இன்றைய பெற்றோர் பெரிதும் விரும்புகிறார்கள். இது தொடர்பாக விவாதிக்க வேண்டியது அவசியம்.

ஆசிரியர்களிடம் கேட்டால், செயல்வழிக் கற்றலையும், புத்தக வழிக்கற்றலையும், தொடர் மதிப்பீட்டு முறைகளையும் ஒன்றாக இணைத்து தொடக்கக்கல்வித் துறையை அரசு சீரழித்து விட்டது என்று ஆதங்கப்படுகிறார்கள். தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு ஒட்டுமொத்தமாக யாரையும் கை காட்டிவிட முடியாது. எல்லோருமே சேர்ந்து தான் தொடக்கப் பள்ளிகள் மூடலுக்கு அடித்தளமிட்டுள்ளனர்.

அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் அவற்றுக்கு தனியாக ஆசிரியர்களை நியமிக்காமல் தமிழ் வழியில் உள்ள ஆசிரியர்களையே வைத்து பாடம் நடத்தினர். சில பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி மாணவர்கள் ஒன்றாகவே பயின்றதும் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.

இத்திட்டம் சோதனை அடிப்படையிலானது என்றாலும், அது செயல்பாடற்று கிடக்கிறது. அதே வேளையில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்களில் நலிவற்ற குழந்தைகளை சேர்க்க வேண்டும். அதற்கான செலவை அரசே ஏற்கும் என்ற திட்டம் அரசுப் தொடக்கப் பள்ளிகளின் மீது அரசே நம்பிக்கை கொள்ளாதது போல உள்ளது. 25 சதவீத மாணவர்களுக்கான கட்டணத்தை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கி அம்மாணவர்களையும் அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் வாதம்.

அரசின் கல்வித்துறை நிர்வாகம் கல்வி செயல்பாடுகளை மேம்படுத்துவதாக இருந்தாலும் கூட ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியளிக்காமல் விடுவது, போதிய நிதி ஒதுக்காமலிருப்பது, காலியாகும் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பாமல் இருப்பது, வரைமுறையின்றி தனியார் பள்ளிகளை திறக்க அனுமதியளிப்பது, அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளை கண்காணிக்காமல் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது போன்றவை அரசு தொடக்கப் பள்ளிகளை அரசே மூட வழி செய்வது போல் ஆகிவிடுகிறது.

அரசின் தலையாய கடமை என்பது அரசுப் பள்ளி என்ற பொதுச்சொத்தை தரமானதாக மாற்றுவதாக இருக்க வேண்டும். அதை மூடுவதாக இருந்தால் தமிழகத்தின் தற்போதை 80 சதவீத கல்வியறிவு என்பது வெகுவாக குறைந்து போகும். ஒவ்வொரு கிராமத்திலும் இடைநிற்றல் அதிகரிக்கும்.

அதே வேளையில் அரசு வரும் கல்வியாண்டிலிருந்து அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் விதம் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கிறது. அதன்படி கல்வியின் தரத்தை மேம்படுத்தும் விதம், எல்லா நிலை ஆசிரியர்கள் எந்த வடிவிலான பாடத்தினையும் சிறப்பாக கற்பிப்பவராக தனது திறனை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பெற்றோரிடம் அரசுப் பள்ளிகளின் தரத்தை எடுத்துக் கூறி வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்துவது ஒவ்வொரு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் தலையாயக் கடமையாகும்.

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமப்புற பள்ளியும் புறக்கணிக்கப்பட்டு மூடப்படும் நிலைக்கான காரணத்தை ஆசிரியர்களும், அரசாங்கமும் அறிந்து கொண்டு அரசு பள்ளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் ஊதிய போராட்டங்களை முன்னெடுப்பது போல, அரசு பள்ளிகளை மீட்டெடுக்கும் கல்வி சீர்திருத்த செயல்பாடுகளிலும் களம் இறங்க வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லாமல் போனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களும் இல்லாமல் போகும் என்பதை உணர்ந்து தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படுவது கட்டாயமானதாகும்.

- ஆசிரியர் க.தர்மராஜ்

Next Story