தூசி அருகே நகை பறித்தவர்களை பிடிக்க முயன்ற இறைச்சிக் கடைக்காரருக்கு வெட்டு
தூங்கிக்கொண்டிருந்த மனைவியிடம் நகை பறித்தவர்களை பிடிக்க முயன்ற இறைச்சிக் கடைக்காரரை அந்த கும்பல் தலையில் வெட்டிவிட்டு தப்பியது.
தூசி
தூசியை அடுத்த மாங்கால் கிராமத்தை சேர்ந்தவர் தணிகைமலை (வயது 45). இறைச்சிக்கடை வைத்துள்ளார். மேலும் சரக்கு ஆட்டோ வைத்தும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேனகா.
நேற்று முன்தினம் இரவு சரக்கு ஆட்டோவில் தணிகைமலை தூங்கினார். அருகே மனைவி மேனகாவும் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்மகும்பல் ஒன்று அங்கு வந்துள்ளது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மேனகா கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்தனர். இதைப்பார்த்த மேனகா ‘திருடன்’... ‘திருடன்’... என கூச்சலிட்டார்.
சத்தம்கேட்டு எழுந்த தணிகைமலை மர்மகும்பலை பிடிக்க முயன்றார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒரு வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தணிகைமலை தலையில் வெட்டி விட்டு கும்பலுடன் தப்பினார். ரத்தம் வழிந்த நிலையில் தணிகைமலை அலறினார்.
அவர்களது சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் தணிகைமலையை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரிவாளால் வெட்டப்பட்ட தணிகைமலை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக இருப்பதால் அந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க மாங்கால் கூட்ரோடு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தூசி போலீசார் நடத்திய விசாரணையில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட செல்லபெரும்புலிமேடு பகுதியை சேர்ந்த சந்துரு மற்றும் அவரது கூட்டாளிகள் தான் ஈடுபட்டது என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story