தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 7 மாணவ, மாணவிகள் படுகாயம்


தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 7 மாணவ, மாணவிகள் படுகாயம்
x
தினத்தந்தி 10 May 2018 4:00 AM IST (Updated: 9 May 2018 11:22 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாணாபுரம்

திருவண்ணாமலையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் மேல்புத்தியந்தல் பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மேல்புத்தியந்தல் மட்டுமல்லாது காட்டாம்பூண்டி, நவப்பட்டு போன்ற சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.

தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சில பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை பாவப்பட்டு கிராமத்தை சேர்ந்த டிரைவர் பிரசாந்த் (வயது 23) என்பவர் ஓட்டிச்சென்றார்.

மேல்புத்தியந்தல் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது ரோட்டின் குறுக்கே சைக்கிளில் ஒருவர் வந்து விடவே அவர் மீது மோதாமல் இருக்க வேனை டிரைவர் பிரசாந்த் லேசாக திருப்பினார். ஆனால் வேன் அவரது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேனுக்குள் இருந்த மாணவ, மாணவிகள் அலறினர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மணலூர்பேட்டையை சேர்ந்த காந்தி மகன் சப்தரிஷ் (15), காட்டாம்பூண்டி சிவக்குமார் மகள் விஷ்ணுபிரியா (16), வேங்கிக்கால் அப்துல்கரீப் மகள் சைனப் (16), நவம்பட்டு சுபாஷ் மகள் சுசித்திரா (15), பெருமணம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் அரவிந்த் (16), தக்காம்பாளையம் அகல்யா (15), நவீன்குமார் (16) ஆகிய 7 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் டிரைவர் பிரசாந்த்துக்கும் படுகாயம் ஏற்பட்டதோடு பல மாணவ, மாணவிகள் லேசான காயம் அடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தச்சம்பட்டு போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்ததும் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாணவ, மாணவிகள் சிகிச்சை பெறும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்து மேலும் தேவையான சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டனர். பின்னர் அவர்கள் மாணவ- மாணவிகளுக்கு ஆறுதல் கூறினர்.

திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி விபத்து குறித்து மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார். சம்பவம் நடந்த இடத்தில் ஆங்காங்கே சாலையில் ரத்தக்கறையும், நோட்டு புத்தகங்களும் சிதறிக்கிடந்தன. போலீசார் அவற்றை அப்புறப்படுத்தி கவிழ்ந்த வேனை மீட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இது தொடர்பாக தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story