அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் உள்பட 2 பேர் பலி
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொதிப்படைந்த கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆற்காடு
வேலூர் மாவட்டம் ஆற்காடு மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. அதற்கு தாக்குப்பிடிக்காமல் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின் கம்பிகளும் அறுந்து விழுந்ததால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திமிரி கிராமத்திலும் பலத்த மழை பெய்தது. இந்த ஊரில் உள்ள நம்பரை சந்து தெருவில் வீட்டில் தனியாக வசித்து வந்த மீனம்மாள் (வயது 65) என்பவரது வீட்டு தோட்டத்தில் இரவு நேரத்தில் வாழை மரங்கள் மீது மின்வயர் அறுந்து விழுந்தது. அந்த வயர் இவரது வீட்டின் எதிர்ப்பகுதி வரை அறுந்து கிடந்தது.
இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியே வந்த மீனம்மாள் மின்வயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் அதன் மீது மிதித்து விட்டார். அப்போது அதில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கியதில் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
இதே கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிச்சாண்டி (59) நேற்று அதிகாலை 2 மணியளவில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை பிச்சாண்டி மிதித்து விடவே அவரும் மின்சாரம் தாக்கி இறந்தார்.
அந்த வழியாக புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பால்காரர் வெங்கடேசன் (21) பால் கறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சாலையில் பிச்சாண்டி விழுந்து கிடந்ததை கண்டு கூச்சலிட்டுள்ளார் இதனால் அங்கு திரண்ட ஊர் பொதுமக்கள் மின் வயர் அறுந்து தெருவில் கிடப்பதை கண்டு திமிரி மின்வாரியத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த மீனம்மாள், பிச்சாண்டி ஆகிய இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதே கிராமத்தில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியாமல் இருந்தது. இது குறித்து ஊராட்சி அலுவலகத்திற்கு கிராம மக்கள் பலமுறை தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். தெருவிளக்கு எரிந்திருந்தால் வெளிச்சத்தின் காரணமாக மின்வயர் அறுந்து கிடந்ததை பிச்சாண்டி பார்த்திருக்கலாம் என்றும் அவர் இறப்பிலிருந்து தப்பியிருக்கலாம் எனவும் பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர். இதனால் கொதிப்படைந்த அவர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அந்த அலுவலகத்திற்கு அவர்கள் பூட்டுபோட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
Related Tags :
Next Story